அஜித் நடிப்பில் வெளியான ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இதையடுத்து, அவர் தனது அடுத்த படமான AK 64-இல் நடிக்கவுள்ளார். இந்த நிலையில், பிரபல நடிகை சினேகா சமீபத்தில் அஜித்தைப் பற்றி பேசிய கருத்துகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
அஜித் குமார் சமீபத்தில் பத்மபூஷன் விருது பெற்றார். கடந்த ஜனவரியில் விருது அறிவிக்கப்பட்டதையடுத்து, கடந்த வாரம் டெல்லியில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவரின் கையால் அந்த விருது வழங்கப்பட்டது. இதற்கு பிறகு பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

ஒருபுறம் கார் பந்தயங்கள், மறுபுறம் சினிமா என தொடர்ந்து வெற்றிகள் பெற்றுவரும் அஜித், ‘விடாமுயற்சி’ மற்றும் ‘குட் பேட் அக்லி’ ஆகிய இரண்டு படங்களிலும் ஒரே சமயத்தில் நடித்தார். இரண்டு படங்களும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றன. ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் வசூலில் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. இதுவரை அஜித் நடித்த படங்களில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
தற்போது அஜித் நடிக்கவிருக்கும் AK 64 திரைப்படத்தை இயக்கப்போவது யார் என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. ஒருபக்கம் ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் மறுபக்கம் தனுஷ் ஆகியோர் இயக்க வாய்ப்பு பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. ஆனால் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
அஜித் சமீப காலமாக மீடியா முன்னிலையில் அடிக்கடி பேசி வருகிறார், குறிப்பாக கார் பந்தயங்களில் கலந்துகொள்போது, அவரின் பேச்சுகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இதனுடன், அவரைப் பற்றிப் பேசும் மற்ற பிரபலங்களின் குறிப்புகள் ரசிகர்களால் பரவி வருகின்றன.
இந்த நிலையில், நடிகை சினேகா சமீபத்தில் அஜித்துடன் நடித்த ‘ஜனா’ படத்தின் படப்பிடிப்பு நினைவுகளை பகிர்ந்துள்ளார். அஜித்தை பார்க்க ஏராளமான ரசிகர்கள் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வருவார்கள். அவர்கள் அனைவரிடமும், லைனில் நின்று, அமைதியாக பொறுமையுடன் ஒவ்வொருவருடனும் புகைப்படம் எடுத்து விட்டு தான் செல்லுவார் அஜித் என அவர் கூறியுள்ளார். அவரின் எளிமையும், ரசிகர்களிடம் காட்டும் மரியாதையும் சினேகாவை ஆச்சரியத்தில் ஆழ்த்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.
சினேகாவின் இந்த உரையாடல் தற்போது அஜித் ரசிகர்களிடையே பரவலாக பகிரப்பட்டு வருகிறது.