சென்னை: அகில இந்திய பாதுகாப்பு ஊழியர் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் சி. ஸ்ரீகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது: மத்திய அரசின் தொழிலாளர் விரோதக் கொள்கைகளால் பாதுகாப்பு ஊழியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டின் பாதுகாப்புக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்ட 223 ஆண்டு பழமையான பாதுகாப்பு தொழிற்சாலைகளை மத்திய அரசு 7 ஆகப் பிரித்து, கூடுதல் நேர ஊதியம் (OT), கருணை வேலைவாய்ப்பு மற்றும் நிரந்தர வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல சலுகைகளை ரத்து செய்துள்ளது.

இந்த ஆண்டு OCF தொழிற்சாலைக்கு சீருடை வேலை ஒதுக்கப்பட்டாலும், அதற்கு நியாயமான பீஸ் ரேட் வழங்கப்படவில்லை. இந்த சூழ்நிலையில், மத்திய அரசின் தொழிலாளர் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக மத்திய தொழிற்சங்கங்களான AITUC, HMS, CITU, LPF மற்றும் பல்வேறு துறை கூட்டமைப்புகள் 20-ம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளன.
பாதுகாப்புத் துறையில் வேலைநிறுத்தத்திற்கு 6 வாரங்களுக்கு முன்பு அறிவிப்பு வழங்குதல், வாக்கெடுப்பு நடத்துதல் போன்ற நடைமுறைகள் உள்ளன. எனவே, அன்றைய தினம் பணிபுரியும் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக பாதுகாப்புத் துறை ஊழியர்கள் போராட்டம் நடத்துவது என்றும், ஒரு மணி நேரம் தாமதமாக வேலைக்குச் செல்வது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.