சென்னை துறைமுகம் மற்றும் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் தற்போது பாதுகாப்பு தொடர்பான போர்க்கால ஒத்திகை நடைபெற்று வருகிறது. இந்த ஒத்திகை பாதுகாப்புத் திட்டங்களை சோதிக்கவும், எவ்விதமான தாக்குதலையும் எதிர்கொள்வதற்கான தயார் நிலையை பரிசோதிக்கவும் நடத்தப்படுகிறது.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22ஆம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலளிக்கும் வகையில் இந்தியா மேற்கொண்ட நடவடிக்கையில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டு, 70 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதையடுத்து நாட்டில் பாதுகாப்பு மீதான கவனம் அதிகரிக்க, நாடு முழுவதும் 259 முக்கிய இடங்களில் போர்க்கால ஒத்திகைகள் இன்று (மே 7) நடைபெற்று வருகின்றன. இதில் அணுமின் நிலையங்கள், ராணுவ முகாம்கள், பெட்ரோல் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளிட்டவை அடங்கும்.
சென்னையில் துறைமுகம் மற்றும் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் சிஐஎஸ்எஃப், பேரிடர் மேலாண்மை மற்றும் தீயணைப்பு படையினர் இந்த ஒத்திகையில் பங்கேற்று வருகின்றனர். வான்வழி தாக்குதல் ஏற்பட்டால் எவ்வாறு பாதுகாப்பாக செயல்பட வேண்டும், மக்கள் எவ்வாறு பதுங்கி தங்களை காக்க வேண்டும் என்பதை விளக்கும் பயிற்சிகள் இதில் இடம்பெறுகின்றன.
அத்துடன், அபாய ஒலி மூலம் மக்கள் எச்சரிக்கப்படுதல், பாதுகாப்பான இடங்களை அடையும் நடைமுறைகள், முக்கிய நிறுவனங்களை எதிரியின் பார்வைக்கு மாறாக வைத்தல், அவசர கால மின்கடுப்பு, பணியாளர்களின் வெளியேற்ற நடவடிக்கைகள் உள்ளிட்டவை சோதிக்கப்படுகின்றன.
போர்க்காலம் போன்ற சூழ்நிலையில் மருத்துவமனைகள் எந்தளவிற்கு தயார் நிலையில் உள்ளன என்பதையும் இந்த ஒத்திகை மூலம் மதிப்பீடு செய்கின்றனர். இதில் தொழில்நுட்ப வசதிகள், பாதுகாப்பு சுரங்கங்கள், தகவல் தொடர்பு முறைகள் ஆகியனவும் கண்காணிக்கப்படுகின்றன.
மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம், இந்த ஒத்திகை குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என அறிவுறுத்தியுள்ளது.இது போரின் அறிகுறி அல்ல, மாறாக தயார்நிலை சோதனை என்றும் அவர்கள் விளக்கியுள்ளனர்.
பொதுமக்கள் எவ்வித பயத்தையும் இல்லாமல், வழக்கமான அன்றாட பணிகளை தொடரலாம் என்றும், இந்த நடவடிக்கைகள் நாட்டின் பாதுகாப்புக்காக முன்கூட்டியே மேற்கொள்ளப்படும் ஒத்திகைகளாகும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த வகை ஒத்திகைகள் தேசிய பாதுகாப்பு உறுதியளிக்க வழிவகுக்கும் எனவும், எதிர்காலத்தில் ஏதேனும் சூழ்நிலைகள் ஏற்பட்டால் அதனை திறமையாக எதிர்கொள்வதற்கான பயிற்சியாகும் எனவும் கூறப்படுகிறது.