புதுடில்லி: மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரம்மோஸ் ஏவுகணை இந்தியாவின் பெருமை எனக் கூறியுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற பிரம்மோஸ் ஏவுகணை உற்பத்தி மையத்தின் தொடக்க விழாவில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் அவர் உரையாற்றினார்.

இந்த நிகழ்வில் நேரில் கலந்துக்கொள்ள முடியாதது வருத்தமாக உள்ளதாகவும், நாட்டின் பாதுகாப்பு காரணமாக தில்லியில் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்தியாவின் பாதுகாப்பு துறையில் இது ஒரு மிக முக்கிய முன்னேற்றம் என்று அவர் கூறினார்.பாகிஸ்தானை குறிவைத்து நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் குறித்தும் அவர் பேசினார்.
பயங்கரவாதிகளை நோக்கி நேர்த்தியான தாக்குதல் மேற்கொள்வது அவசியம் எனவும், நமது இலக்குகளை நேரத்தில் நிறைவேற்ற வேண்டியதுண்டு எனவும் கூறினார்.அதற்கான முன்னோடியான அணுசக்தி சோதனை கடந்த காலத்தில் வாஜ்பாய் தலைமையில் நடந்ததையும் அவர் நினைவூட்டினார். இந்தியாவின் வலிமையை உலகம் அறிந்தது அந்த நிகழ்வின் மூலம் தான் என்றார்.பிரம்மோஸ் ஏவுகணை திட்டம் வெறும் 40 மாதங்களில் நிறைவு பெற்றுள்ளது.
இது இந்திய விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களின் அர்ப்பணிப்பு உணர்வை காட்டும் சிறந்த எடுத்துக்காட்டாகும்.உத்தரபிரதேசத்தில் இந்த உற்பத்தி மையம் அமைக்கப்பட்டதற்கு அந்த மாநிலத்தின் முதலமைச்சருக்கு நன்றியையும் தெரிவித்துள்ளார். இந்தியா பலத்துடன் வளர வேண்டும் என்பதே தற்போதைய தேவை என அவர் வலியுறுத்தினார்.பாகிஸ்தானின் ராவல்பிண்டி ராணுவ தலைமையகத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் வழங்கும் நாடுகளுக்கு ஒரு எச்சரிக்கையாக இருந்தது. இந்தியா, மதத்தலங்கள் மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை என்றும், பாகிஸ்தான் ராணுவமே அப்பாவிகள் மீது தாக்குதல் நடத்தியது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.