புதிய போப் லியோ, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போர் நிறுத்தத்தை வரவேற்கும் வகையில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த 69 வயதான ராபர்ட் பிரீவோஸ்ட், தற்போது போப் லியோ XIV ஆக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தனது பொறுப்பேற்ற பின் முதலாவது ஞாயிறு உரையில், அவர் உலக அமைதி குறித்து முக்கியமான கருத்துகளை பதிவு செய்தார்.
உக்ரைனில் நிலவும் துயர நிலைமை குறித்து அவர் ஆழ்ந்த கவலை தெரிவித்தார். அங்கு விரைவில் அமைதி நிலவ வேண்டும் என்றும், பிணை கைதிகள் விடுதலையடைய வேண்டும் என்றும் தெரிவித்தார்.காசா பகுதியில் உள்ள துயரநிலையைத் தொடர்ந்து அவர் உடனடி போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

அந்தப் பகுதியின் மக்களுக்கு தேவையான மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்று கூறினார். இந்தியா-பாகிஸ்தான் இடையிலான சமீபத்திய போர் நிறுத்தம் முக்கியமான முன்னேற்றமாகும் என அவர் குறிப்பிட்டார். இது தொடர்ச்சியாக நடத்தப்படும் பேச்சுவார்த்தைகளுக்கு வழிவகுக்கும் என்றும், நிலையான அமைதி ஒப்பந்தம் உருவாகும் என்பதிலும் நம்பிக்கை தெரிவித்தார்.
உலகில் அமைதி நிலவ இறைவனின் ஆசீர்வாதத்தைக் கேட்டுக்கொண்ட போப், அனைத்துத் தரப்புகளும் சுயநலத்தை தாண்டி மனிதாபிமானம் மற்றும் ஒற்றுமைக்காக செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். உலக நாடுகள் ஒற்றுமையாக செயல்பட்டால் மட்டுமே உண்மையான அமைதி பெற இயலும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.