மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 40,018 அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 5.09 அடி உயர்ந்து 55.12 அடியை எட்டியது. கர்நாடகாவில் கனமழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கபினி மற்றும் கேஆர்எஸ் அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டதால், காவிரியில் கடந்த சில நாட்களாக நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று காலை 23,989 கன அடியாகவும், மாலையில் 31,102 கன அடியாகவும் அதிகரித்தது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், இன்று (ஜூலை 19) காலை வரத்து வினாடிக்கு 40,018 கன அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கனஅடி மட்டுமே திறக்கப்படுகிறது. இந்நிலையில், நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று காலை 50.03 அடியில் இருந்து இன்று காலை 55.12 அடியாக உயர்ந்தது.
நீர் இருப்பு 17.83 டிஎம்சியில் இருந்து 21.18 டிஎம்சியாக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 5.09 அடியாகவும், நீர் இருப்பு 3.35 டிஎம்சியாகவும் உயர்ந்துள்ளது. அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேட்டூர் காவேரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருவதால், அடிப்பாலாறு, செட்டிப்பட்டி, கோட்டையூர், பண்ணவாடி உள்ளிட்ட நீர் பிடிப்பு பகுதிகளில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை.இதேபோல் கோட்டையூர், பண்ணவாடி பரிசல் பிரிவுகளில் பரிசல், படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இதேபோல் பண்ணவாடி பரிசல் துறையில் இருந்த தற்காலிக மீன் கடைகளையும் மீனவர்கள் அகற்றினர். நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் நீர்த்தேக்கப் பகுதியில் நிலத்தை உழுது கொண்டிருந்த விவசாயிகள் அவசர அவசரமாக பயிர்களை அறுவடை செய்து வருகின்றனர்.