சென்னை: கோவில் சொத்துகளை காக்க பக்தர்களை ஒருங்கிணைத்து வரும் 21ம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்போவதாக இந்து முன்னணி அறிவித்துள்ளது. இதுகுறித்து, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழகத்தில் உள்ள ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்கள், மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன.
இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோவில்களுக்கு சொந்தமாக லட்சக்கணக்கான நிலங்களும், வீடுகளும் உள்ளன. இந்து சமய அறநிலையத் துறை தமிழக அரசால் கோயில் சொத்துகளைப் பாதுகாக்கவும் பராமரிக்கவும் உருவாக்கப்பட்டது. கடந்த 75 ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்ட திராவிட அரசியல் வாதிகளால் பல்லாயிரக்கணக்கான கோயில்களும், ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களும் அழிக்கப்பட்டுள்ளன அல்லது இழந்துள்ளன என்பது இந்து சமய அறநிலையத் துறையின் ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது. மேலும், ஆட்சியர் அலுவலகம், பேருந்து நிலையம், சமத்துவபுரம், சமூக நலத்துறை போன்ற பொதுமக்கள் பயன்பாட்டுக்காக இந்து கோவில்களின் சொத்துக்களை அரசு பகல் கொள்ளையாக அபகரித்துள்ளது. அதுமட்டுமின்றி, கோயில் சொத்துக்களுக்கு உரிய இழப்பீடு அல்லது வாடகை கூட வழங்குவதில்லை.
அதேசமயம் கிறிஸ்தவ மத நிறுவனங்களுக்கு அரசு நிலத்தை விட அதிக நிலம் உள்ளது. ஒரு அங்குல நிலத்தையாவது மக்கள் பயன்பாட்டுக்காக அரசு கையகப்படுத்தி உள்ளதா? அதேபோன்று மசூதிகளின் சொத்தாக கருதப்படும் வக்ஃப் சொத்துக்களை பாதுகாக்க தமிழர்களின் வரிப்பணத்தில் இருந்து கொடுத்து முஸ்லிம்களை வைத்து நிர்வாகம் செய்ய வைக்கிறது அரசு. ஒருபுறம் இந்து கோவில்களின் சொத்துக்களை அரசு திட்டமிட்டு சூறையாடுகிறது. மறுபுறம் கோவில் நிலங்கள் காணாமல் போக அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் உதவி வருகின்றனர்.
பிரம்மாண்டமான கோவிலை கட்டிய நம் முன்னோர்கள் அதை நிர்வகிக்கவும் பாதுகாக்கவும் இறைவனுக்கு கோடிக்கணக்கான சொத்துக்களை எழுதி வைத்துள்ளனர். மேலும், கோவில் சொத்துகள் கோவில் பயன்பாட்டுக்கு தான் என்றும், வேறு எந்த தேவைக்கும் பயன்படுத்தக்கூடாது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
எனவே கோவில் சொத்துகளை பாதுகாக்க தவறிய இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை தண்டிக்க வேண்டும். கோயில் சொத்துக்களைப் பாதுகாக்க கடுமையான சட்ட நடைமுறைகள் வகுக்கப்பட வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தி வருகிறது. வரும் 21ம் தேதி தமிழகம் முழுவதும் கோவில் சொத்துக்களை காக்க பக்தர்களை ஒருங்கிணைத்து போராட்டம் நடத்தப்படும். இதற்கு தமிழக மக்கள் முழு ஆதரவை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்றார்.