சென்னை: தூத்துக்குடியில் ரூ.36,236 கோடி முதலீட்டில் பசுமை ஹைட்ரஜன் ஆலை அமைப்பதற்கான அடிப்படை ஒப்பந்தப் பணிகளை சிங்கப்பூரின் செம்கார்ப் நிறுவனம் தொடங்கியுள்ளது.
தமிழ்நாடு தொழில் துறை சார்பில் கடந்த ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் ரூ.6,64,180 கோடி முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதில் சிங்கப்பூரைச் சேர்ந்த செம்கார்ப் நிறுவனம் ரூ.36,236 கோடி முதலீட்டுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. தூத்துக்குடியில் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி ஆலையை அமைக்கும் முயற்சியாக இந்நிறுவனம் இந்த முதலீட்டைச் செய்கிறது.
அதன்படி, தூத்துக்குடியில் பசுமை ஹைட்ரஜன் யூனிட்களை அமைப்பதற்கான முதற்கட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி வருகிறது. இந்த முதலீட்டின் அடிப்படையில் தூத்துக்குடியில் 1,500 வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பச்சை ஹைட்ரஜனை ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்ய ஜப்பானிய நிறுவனங்களான Sojits Corp மற்றும் Kyushu Electric Power உடன் CempCorp இணைந்து செயல்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.