உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய போரால் கடும் பாதிப்புகளை சந்தித்து வரும் நிலையில், அமைதி பேச்சுவார்த்தை முயற்சிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ரஷ்யா மற்றும் உக்ரைன் பிரதிநிதிகள் நேரடியாக சந்தித்து அமைதிக்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சந்திப்பு துருக்கியின் தலைநகர் இஸ்தான்புல்லில் நடைபெற்றது.

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்த நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அதை ஏற்று, தனது நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாதுகாப்பு அமைச்சருடன் பேச்சுவார்த்தைக்குப் புறப்பட்டார். பாதுகாப்பு அமைச்சர் ருஸ்டெம் உமரோவ் தலைமையிலான உக்ரைன் குழு, அதிபர் புடினின் உதவியாளர் மெடின்ஸ்கி தலைமையிலான ரஷ்ய குழுவுடன் சுமார் இரண்டு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியது.
இந்த பேச்சுவார்த்தையின் பின்னர், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அல்பேனியாவில் ஐரோப்பிய தலைவர்களுடன் தொடர்ச்சியாக சந்திக்கிறார். அந்த சந்திப்புகளில் அவர், ரஷ்யா மீது சர்வதேச அழுத்தத்தை அதிகரிக்க வேண்டும் என்றும், உக்ரைனுக்கான ராணுவ உதவியை விரைவுபடுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
அமைதிக்கான முக்கியமான முதல் படி என்றால் போரை நிறுத்துவது தான் என்று அவர் தெரிவித்தார். ஆனால், ரஷ்யா அதற்காக தயாராக இல்லை என்பதே தற்போதைய சூழல். எனவே, ரஷ்யாவை சர்வதேச அளவில் ஒடுக்க பொருளாதார தடைகளை மேலும் அதிகரிக்க வேண்டும் என்றார்.
மேலும், உக்ரைனின் வான் பாதுகாப்பு சுத்தமாக இல்லாததால் ரஷ்யா தொடர்ந்து தாக்கங்களை மேற்கொண்டு வருகிறது. இதனால் வான் பாதுகாப்பு முறைகளை மேம்படுத்துவது அவசியமாகி இருக்கிறது. அதனுடன் பாதுகாப்பு உற்பத்தி திறன்களையும் அதிகரிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
உலக நாடுகள், குறிப்பாக ஐரோப்பிய யூனியன் உறுப்பினர்கள், உக்ரைனுக்கு மேலும் ஆயுதங்கள், ராணுவ பயிற்சி மற்றும் நிதியுதவிகளை வழங்க முன்வரவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மேலும், இந்த சந்திப்பு எவ்வளவு சிறப்பாக முடிந்தாலும், புடின் நேரடியாக பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளாதது ஏமாற்றமாகும் என்று அவர் கருத்து தெரிவித்தார்.
உலக அமைதி மற்றும் சுதந்திரத்திற்கு ரஷ்யா ஏற்படுத்தும் சவால்களை எதிர்க்க, ஐரோப்பிய நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனவும், உக்ரைன் தொடர்ந்து போராடும் என்பதை உலகம் புரிந்துகொள்ள வேண்டுமென ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.