சென்னை: மே 4-ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்ற இளங்கலை மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வில், மின் தடையால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தொடர்ந்த வழக்கில், நீட் முடிவுகளை வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வழக்கு, அவசர விசாரணைக்காக நீதிபதி வி. லட்சுமி நாராயணன் முன் வந்தது.

ஆவடியில் அமைந்துள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் மட்டும் 464 மாணவர்கள் தேர்வு எழுதினர். ஆனால், பிற்பகல் 2.45 மணிக்கு துவங்கிய கனமழையால், 3 மணி முதல் 4.15 மணி வரை மின்தடை ஏற்பட்டது. இதனால் மாணவர்கள் குறைந்த வெளிச்சத்தில் எழுத வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும், மழைநீர் மையத்திற்குள் புகுந்ததால் சிலர் இடம் மாறி எழுத வேண்டியிருந்தது.
இதையடுத்து, திருவள்ளூரைச் சேர்ந்த சாய் ப்ரியா, காஞ்சிபுரத்தை சேர்ந்த ஹரிஹரன் மற்றும் ராணிப்பேட்டையைச் சேர்ந்த அக்ஷயா உள்ளிட்ட 13 பேர், “முழுமையாக தேர்வு எழுத முடியவில்லை. கூடுதல் நேரம் வழங்கப்படவில்லை. இது போன்ற சூழ்நிலையில் தேர்வை எழுத முடியாததால், மறுதேர்வு நடத்த வேண்டும்” என்று கோரி மனுத் தாக்கல் செய்தனர். தேசிய தேர்வு முகமைக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
இந்த மனுவில், நீதிமன்றத்தில் விசாரணையின் போது மத்திய அரசின் சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன் ஆஜராகி, “மின் தடையால் தேர்வு பாதிக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க மேலும் அவகாசம் தேவைப்படுகிறது” எனக் கூறினார். இந்த கோரிக்கையை ஏற்ற நீதிபதி, மத்திய அரசு, தேசிய தேர்வு முகமை மற்றும் மருத்துவ ஆணையம் ஆகியவை பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
இதுவரை பதில் தரும் வரை, நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதிக்கப்படும் என்றும் நீதிபதி கூறியுள்ளார். இந்த வழக்கு மீதான விசாரணை ஜூன் 2 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பு, எதிர்பாராமல் ஏற்பட்ட மின் தடையால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஒரு நம்பிக்கை உருவாக்கி உள்ளது. அவர்களது மனநிலை மற்றும் எதிர்காலம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, நீதிமன்றம் எடுத்த முடிவு குறிப்பிடத்தக்கது.