மதுரை ஜிகர்தண்டா, விருதுநகர் பரோட்டா, திருநெல்வேலி அல்வா போன்றவை ஒவ்வொரு ஊரின் பிரபல உணவுகளாக உண்டு. அதேபோல், சேலத்தின் பெயரை கேட்டால், அங்கு மாம்பழம் மற்றும் தட்டுவடை செட் பிரபலமாக உள்ளது. ஆனால் இப்போது, சேலத்தில் ஸ்டைல் மட்டன் குழம்பு மிகவும் டிரெண்டாகி வருகிறது. சேலம் ஸ்பெஷல் மட்டன் குழம்பு செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

சேலம் மட்டன் குழம்புக்கு தேவையான பொருட்கள் 3/4 கிலோ மட்டன், 1/2 கிலோ சின்ன வெங்காயம், 1 கிலோ தக்காளி, 2 டேபிள் ஸ்பூன் மல்லி தூள், 1 டீஸ்பூன் மஞ்சள் தூள், 2 பட்டை, 1 டீஸ்பூன் மிளகு, 1 டீஸ்பூன் சீரகம், 1 டீஸ்பூன் சோம்பு, 1 டீஸ்பூன் கசகசா, 1 மூடி தேங்காய், 2 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட், 10 வரமிளகாய், 2 கிராம்பு, 2 ஏலக்காய், 1 பிரியாணி இலை, சிறிது கறிவேப்பிலை, தேவையான அளவு எண்ணெய் மற்றும் உப்பு ஆகும்.
முதலில், மட்டனை நன்கு கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு, குக்கருடன் அடுப்பில், கழுவி வைத்துள்ள மட்டன், மஞ்சள் தூள், 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் உப்பு சேர்த்து, 1 கப் தண்ணீர் ஊற்றி, 5 விசில் விட்டு இறக்க வேண்டும்.
பிறகு, ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி, வரமிளகாய், கறிவேப்பிலை, சீரகம் மற்றும் மிளகு சேர்த்து வறுத்து, தனியாக வைக்க வேண்டும். அதே வாணலியில் உள்ள எண்ணெயில் வெங்காயத்தை போட்டு வதக்கி இறக்க வேண்டும்.
இப்போது, மற்றொரு கடாயில் சோம்பு, கசகசா, தேங்காய் சேர்த்து லேசாக வறுத்து, எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டு அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு, அந்த கடாயை மீண்டும் அடுப்பில் வைத்து, சிறிது எண்ணெய் ஊற்றி, பட்டை, கிராம்பு, பிரியாணி இலை மற்றும் ஏலக்காய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும், நறுக்கிய தக்காளி சேர்த்து 2 நிமிடம் வதக்கி, அதில் வேக வைத்திருந்த மட்டனை ஊற்றி கொதிக்க விட வேண்டும். பின், அரைத்து வைத்த அனைத்து கலவைகளையும் சேர்த்து, உப்பு சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விட்டு, இறுதியில் தேங்காய் கலவையை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 5-10 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால், ருசிகரமான சேலம் ஸ்பெஷல் மட்டன் குழம்பு தயார்.