தொண்டாமுத்தூர்: கோவை அருகே உள்ள தொண்டாமுத்தூர் மாரியம்மன் மற்றும் பெரிய விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா நேற்று இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது. பின்னர் பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் ரூ.11.84 கோடி செலவில் கட்டப்பட்ட தர்ப்பண மண்டபம், ரூ.51 லட்சம் செலவில் கட்டப்பட்ட அன்னதான கூடம், ரூ.55 லட்சம் செலவில் கட்டப்பட்ட கோசாலை, ரூ.16.30 லட்சம் செலவில் கட்டப்பட்ட சிமென்ட் சாலை, ரூ.11.70 லட்சம் செலவில் கட்டப்பட்ட பணியாளர் கழிப்பறை ஆகியவற்றை அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார்.
பின்னர், மருதமலை கோயில் அடிவாரத்தில் ஆசியாவிலேயே மிக உயரமான 184 அடி உயர முருகன் சிலை அமைக்கும் இடத்தை ஆய்வு செய்த அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது:- மருதமலை முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்களின் நலனுக்காக, தற்போதுள்ள தற்காலிக பேருந்து நிலையத்தை நிரந்தரமாக்குவதற்கும், மழைக்காலங்களில் பக்தர்கள் சிரமமின்றி பயணிக்கும் வகையில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கும், அங்கிருந்து கோயிலுக்குச் செல்லும் பாதையின் இருபுறமும் நிழல் கூரையுடன் கூடிய கண்ணாடி நடைபாதை அமைக்கவும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

இங்கு மின்தூக்கி அமைக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு, ஜூலை மாதத்திற்குள் பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். வடவள்ளி பகுதியில் புதிய பாலிடெக்னிக் கல்லூரி கட்டுவதற்கான இடம் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. சுமார் இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்படும் இந்தக் கல்லூரிக்கான கட்டுமான மதிப்பீடு ரூ.20 முதல் 25 கோடி வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதற்காக தற்போது மண் பரிசோதனை நடைபெற்று வருகிறது. மருதமலை கோயில் சார்பாக ஒரு கல்வி மையத்தை நிறுவவும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. மருதமலை கோயிலின் அடிவாரத்தில் ஆசியாவிலேயே மிக உயரமான 184 அடி உயர முருகன் சிலையை அமைக்கும் பணி மிக விரைவில் தொடங்கும் என்று அமைச்சர் கூறினார்.