மழைக்காலம் வந்தாலே போதும், கொசுக்கள், ஈக்கள் தொல்லை கொடுக்க ஆரம்பித்துவிடும். இதனால் விரைவில் சொறி , மலேரியா மற்றும் டெங்கு போன்ற பல தொற்றுநோய்கள் பரவ ஆரம்பித்துவிடும். கொசுக்களை விரட்ட மக்கள் பல்வேறு வழிகளை முயற்சி செய்கிறார்கள். இந்த பிரச்சனையை சமாளிக்க ரசாயன மருந்துகளை பலர் பயன்படுத்துகின்றனர்.
ஆனால் இந்த மருந்துகள் பெரும்பாலும் பக்க விளைவுகளை ஏற்படுத்துகின்றன. எனவே கொசுக்களை எளிதில் விரட்ட இயற்கை முறையை பயன்படுத்துவதே சிறந்தது. அதாவது கொசுக்களை விரட்ட உங்கள் வீட்டில் உள்ள பொருட்களையே பயன்படுத்தலாம் , அது என்னென்ன, எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்., பூண்டு: கொசுக்களை விரட்ட பூண்டு பயன்படுத்தலாம். பூண்டு வாசனை கொசுக்களை உங்களிடமிருந்து விலக்கி வைக்கும்.
இதற்கு 5 – 10 பூண்டு துண்டுகளை எடுத்து கொள்ளுங்கள். பிறகு பாட்டிலில் தண்ணீர் நிரப்பி அதனுடன் பூண்டு சேர்த்து நன்கு கலக்கவும். இப்போது இந்த தண்ணீரை வீடு முழுவதும் தெளிக்கவும். இவ்வாறு செய்வதால் கொசு தொல்லை இருக்காது. கற்பூரம்: கற்பூரத்தைப் பயன்படுத்தி கொசுக்களை விரட்டலாம். இதற்கு வீட்டின் கதவுகளை மூடிவிட்டு கற்பூரம் ஏற்ற வேண்டும். கற்பூரத்தை ஏற்றி அரை மணி நேரம் கழித்து, கதவு மற்றும் ஜன்னல்களைத் திறக்கவும். கற்பூர வாசனை கொசுக்களை ஈர்க்காது. இதனால் கொசுக்கள் வீட்டிற்குள் வராது.
வேப்ப எண்ணெய்: வேப்ப எண்ணெய்யை பயன்படுத்துவதன் மூலம் கொசுக்களையும் விரட்டலாம். இதற்கு வேப்ப எண்ணெயை சருமத்தில் தடவ வேண்டும். நேரடியாக தடவ முடியாது, தண்ணீரில் கலந்து கை, கால்களில் தடவலாம். இப்படி செய்வதால் நமது அருகே கொசுக்கள் வரமால் ஓடிவிடும். எலுமிச்சை, கிராம்பு : எலுமிச்சை பயன்படுத்தியும் கொசுக்களை விரட்ட முடியும். இதற்கு முதலில் எலுமிச்சையை பாதியாக வெட்டவும். பின்னர் சில கிராம்புகளை அரைக்கவும். பிறகு கிராம்பில் எலுமிச்சையில் சாறு சேர்த்து வீட்டின் ஒரு மூலையில் வைக்கவும்.
நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட எலுமிச்சை பழங்களை பயன்படுத்தி வீட்டின் அனைத்து மூலைகளிலும் வைத்தால் கொசுக்கள் அண்டாது. துளசி இலைகள்: துளசி இலைகள் கொசுக்களை எளிதில் விரட்டும். இதற்கு துளசி இலையை நைசாக அரைத்து சாறு தயாரிக்கவும். இந்த சாற்றை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றவும். பின்னர் அதை வீடு முழுவதும் தெளிக்கவும். துளசியின் வாசனையிலிருந்து கொசுக்கள் ஓடிவிடும். இந்த சாறை தயாரித்து சேமித்து வைத்துக்கொள்ளலாம். பின்னர் தினமும் மாலை நேரத்தில் தெளித்து வந்தால் கொசுக்கள் தொல்லையில் இருந்து தப்பித்து விடலாம்.இதேபோல கொய்யா இலைகளை எரித்து அந்த புகையை வீடு முழுவதும் பரவ விட்டாலும் கொசுக்கள் ஓடிவிடும்.