சென்னை: சவுக்கு சங்கர் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை எதிர்த்து அவரதுதாயார் தொடர்ந்த ஆட்கொணர்வு மனு, உயர் நீதிமன்றத்தில் வரும் 23-ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.
பெண் போலீஸாரை அவதூறாக பேசியது மற்றும் கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் குறித்து அரசுக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவித்து பொதுமக்களை போராடத் தூண்டியது உள்ளிட்ட வழக்குகளில் கைதான யூடியூபர் சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைத்து சென்னை மாநகர காவல் ஆணையர் கடந்த மே மாதம் உத்தரவிட்டிருந்தார்.
இதை எதிர்த்து சவுக்கு சங்கரின் தாயார் கமலா, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் தள்ளி வைக்கப்பட்டிருந்த நிலையில், இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சவுக்கு சங்கருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது. அத்துடன், உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கை விரைந்து விசாரிக்கும் வகையில் சம்பந்தப்பட்ட அமர்வில் முறையீடு செய்யலாம் எனவும் மனுதாரருக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.
அதன்படி, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் சவுக்கு சங்கரின்தாயார் தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகி, வழக்கை விரைந்து விசாரிக்க முறையீடு செய்யப்பட்டது. இதுதொடர்பாக உத்தரவுநகலை சமர்ப்பிக்கும்படி நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
அதற்கு தமிழக அரசு தரப்பில்ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் உச்ச நீதிமன்ற உத்தரவு நகலை மாலைக்குள் தாக்கல் செய்வதாகவும், ஆட்கொணர்வு மனுவை ஜூலை 23-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளகோரினார்.
அதையேற்ற நீதிபதிகள், ஆட்கொணர்வு மனு வரும் 23-ம் தேதிவிசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவித்துள்ளனர்.