‘குட் பேட் அக்லி’ படத்தில் நடித்த நடிகர் ராகுல் தேவின் தம்பியும், பாலிவுட் மற்றும் தென்னிந்திய திரையுலகில் பல்வேறு மொழிகளில் நடித்துள்ள முகுல் தேவ் காலமானார் என்ற செய்தி திரையுலகை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ராகுல் தேவ் தனது தம்பி முகுல் தேவ் மறைந்ததாக இன்ஸ்டாகிராம் மூலம் உறுதி செய்துள்ளார்.
முகுல் தேவ் வெறும் 54 வயதிலேயே உயிரிழந்துள்ளார். அவர் கடந்த இரவு தூக்கத்தில் இருப்பினும், உயிர் பிரிந்ததாக கூறப்படுகிறது. அவரது இறுதிச்சடங்கு நேற்று டெல்லியில் நடைபெற்றது. முகுலின் மகளான சியா தேவ் தற்போது குடும்பத்துடன் தங்கியுள்ளார்.
மாடலிங், சினிமா, சீரியல் என பல துறைகளில் செயல்பட்ட முகுல் தேவ், ஹிந்தி தவிர பஞ்சாபி, கன்னட, மலையாளம், ஆங்கிலம், குஜராத்தி போன்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார். அவர் ஒரு பயிலட் பட்டம் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முகுலின் மரணத்தை அறிந்த சல்மான் கான், ஜெய் ஹோ பட ஷூட்டிங்கின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டு, “உன்னை மிஸ் பண்ணுகிறேன் தம்பி” என நினைவு கூறினார்.
அதேபோல் ‘சன் ஆஃப் சர்தார்’ படத்தில் முகுலுடன் நடித்த அஜய் தேவ்கன், “என்னால் நம்பவே முடியவில்லை, இது மிகுந்த துயரம்” என பதிவிட்டார். நடிகர் மனோஜ் பாஜ்பாயும், “என் சகோதரனை இழந்தது போலவே தோன்றுகிறது. வார்த்தைகளே இல்லை” என தன் உணர்வுகளை பகிர்ந்துள்ளார்.
முகுல் தேவின் நண்பரும் நடிகையுமான தீப்ஷிகா நாக்பால், “இது ஒரு வதந்தியாக இருக்கும் என நினைத்து நேரில் பேசியே தெரிய வேண்டும் என நினைத்தேன். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை” என வேதனையுடன் கூறினார்.
முகுல் தேவ் மிகவும் அன்பும் அமைதியும் நிறைந்தவராக இருந்தார். பலருடன் நெருக்கமாக இருந்த இவர், கடினமான காலங்களிலும் உற்சாகத்துடன் இருந்தவர். அவர் சமீபத்தில் “சன் ஆஃப் சர்தார் 2” படத்தில் நடித்திருந்தார். ஆனால் அந்த படம் இன்னும் வெளியாகவில்லை.
இது போன்ற திடீர் மரணங்கள் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன. முகுல் தேவின் குடும்பத்தாருக்கு, நண்பர்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். “வெறும் 54 வயதுதானே! போகும் வயதா இது?” என ரசிகர்கள் வேதனைப்படுகிறார்கள்.
முகுலின் நினைவுகளை வாசிக்கும் ஒவ்வொரு ரசிகரின் கண்களிலும் கண்ணீர் கசிய, திரைத்துறையின் இன்னொரு முக்கியமான மனிதர் பறந்து போனார். ஓம் சாந்தி, முகுல் தேவ்.