பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்து உலகிற்கு விளக்க அனைத்து கட்சிகளின் எம்.பி.க்கள் அடங்கிய 7 குழுக்களை மத்திய அரசு நியமித்துள்ளது. இந்தக் குழுக்கள் தனித்தனியாக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளன. இதில், பாஜக எம்.பி. வைஜெயந்த் பாண்டா தலைமையிலான குழு சவுதி அரேபியா, குவைத், பஹ்ரைன் மற்றும் அல்ஜீரியா ஆகிய நாடுகளுக்குச் சென்றுள்ளது.
குழு பஹ்ரைன் அரசாங்கத்தின் மூத்த அதிகாரிகளைச் சந்தித்துப் பேசியது. அந்த நேரத்தில், குழுவின் ஒரு பகுதியாக இருக்கும் ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவரும் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி கூறியதாவது:- நமது நாடு பல ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொண்டு வருவதை உலகம் நன்கு அறிந்திருக்கிறது. இதன் விளைவாக ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்தப் பிரச்சினை அண்டை நாடான பாகிஸ்தானில் இருந்து உருவாகிறது. பயங்கரவாதக் குழுக்களை ஆதரிப்பது, நிதியளிப்பது மற்றும் ஊக்குவிப்பதை பாகிஸ்தான் நிறுத்தும் வரை இந்தப் பிரச்சினை தீர்க்கப்படாது.

சமீபத்தில், காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இந்தப் படுகொலையின் துயரத்தைப் பற்றி யோசித்துப் பாருங்கள். ஒரு பெண் தனது திருமணமான 7-வது நாளில் தனது கணவரை இழந்தார். திருமணமான இரண்டு மாதங்களுக்குப் பிறகு மற்றொரு பெண் தனது கணவரை இழந்தார். இந்தத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய ராணுவம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது துல்லியமான வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.
இதைத் தொடர்ந்து, தோற்கடிக்கப்பட்ட பாகிஸ்தான் ராணுவம் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவியது. ஆனால் இந்திய விமானப்படை அவற்றை நடுவானில் தடுத்து அழித்தது. இந்தியாவில் அரசியல் வேறுபாடுகள் உள்ளன. ஆனால் நாட்டின் பாதுகாப்பைப் பொறுத்தவரை நாம் அனைவரும் ஒன்றுபட்டுள்ளோம் என்பதை பாகிஸ்தான் புரிந்து கொள்ள வேண்டும். சர்வதேச பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதி கண்காணிப்பு அமைப்பான நிதி நடவடிக்கை பணிக்குழுவின் (FATF) சாம்பல் பட்டியலில் பாகிஸ்தானை சேர்க்க பஹ்ரைன் அரசாங்கம் உதவ வேண்டும் என்று அவர் கூறினார்.