புதுடில்லி:’கடந்த, 2022 – 23ம் நிதியாண்டில், பி.ஆர்.எஸ்., எனப்படும், பாரத ராஷ்டிர சமிதி, 737.67 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது’ என, ஜனநாயக சீர்திருத்த சங்கம் எனப்படும், ஏ.டி.ஆர். தெரிவித்துள்ளது.
நாட்டில் உள்ள 57 மாநிலக் கட்சிகளில் 39 கட்சிகள் 2022-23 நிதியாண்டில் வருமானம் மற்றும் செலவு குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளன. விவரம்: கணக்கெடுக்கப்பட்ட 39 மாநிலக் கட்சிகளில், தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரத் ராஷ்டிர சமிதி 2022-23 நிதியாண்டில் ரூ.737.67 கோடி சம்பாதித்துள்ளது.
இதைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ், 333.45 கோடி; திமுக ரூ.214.35 கோடி வருமானம் ஈட்டியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் தேர்தல் பத்திரங்கள். அதிக செலவு செய்த கட்சிகளில் திரிணாமுல் காங்கிரஸ் ரூ.181.18 கோடியுடன் முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து ஒய்எஸ்ஆர்-காங்., ரூ.79.32 கோடி; பி.ஆர்.எஸ்., ரூ.57.47 கோடி; திமுக ரூ.52.62 கோடியும், சமாஜ்வாதி ரூ.31.41 கோடியும் செலவு செய்துள்ளன.
செலவு
தேர்தல் ஆணையம் நிர்ணயித்த காலக்கெடுவைத் தாண்டி 23 கட்சிகள் தங்களின் வருடாந்திர தணிக்கை கணக்குகளை தாமதமாக சமர்ப்பித்துள்ளன. சிவசேனா, போடோலாந்து மக்கள் முன்னணி, தேசிய மாநாட்டுக் கட்சி, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட 18 பிராந்தியக் கட்சிகளின் தணிக்கை அறிக்கைகள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் ஆய்வு செய்யப்பட்டபோது கிடைக்கவில்லை.
20 கட்சிகள் வருமானத்துக்கு அதிகமாக செலவு செய்துள்ளன. மதச்சார்பற்ற ஜனதா தளம் தனது வருமானத்தை விட 490.43 சதவீதம் அதிகமாக செலவு செய்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.