புது டெல்லி: பஞ்சாபைச் சேர்ந்த ஹுஷன்பிரீத் சிங் (சங்ரூர்), ஜஸ்பால் சிங் (எஸ்.பி.எஸ் நகர்), அம்ரித்பால் சிங் (ஹோஷியார்பூர்) ஆகிய மூன்று இளைஞர்களும் மே 1-ம் தேதி விமானம் மூலம் ஈரானுக்குப் புறப்பட்டனர். ஆனால் அவர்கள் தெஹ்ரானில் தரையிறங்கிய பிறகு காணாமல் போனார்கள். பஞ்சாபின் ஹோஷியார்பூரைச் சேர்ந்த ஒரு முகவர், துபாய் மற்றும் ஈரான் வழியாக அவர்களை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்புவதாக உறுதியளித்திருந்தார்.

ஆனால் தெஹ்ரானை அடைந்த பிறகு, மூவரும் ஒரு கும்பலால் கடத்தப்பட்டனர். ரூ.1 கோடி பணம் கொடுக்காவிட்டால், மூவரையும் தொலைபேசியில் கொன்றுவிடுவதாக கும்பல் மிரட்டியதாக இளைஞர்களின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். இந்த சூழ்நிலையில், இந்திய தூதரகம் அவர்களின் புகாரைத் தொடர்ந்து, மூவரும் ஈரானில் கடத்தப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய தூதரகம் இந்த விஷயத்தை ஈரானிய அதிகாரிகளிடம் எடுத்துச் சென்றுள்ளது. உடனடியாக மூவரையும் கண்டுபிடித்து அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான முயற்சிகள் மற்றும் முன்னேற்றங்களை தூதரகம் அவ்வப்போது குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்கிறது” என்று கூறப்பட்டுள்ளது.