சென்னை: மத்திய அரசின் மீது வீண் பழி சுமத்துவதா என்று திமுக மீது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆவேசப்பட்டுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் அரசியலில் தங்கள் இருப்பைக் காட்டிக்கொள்ள வேண்டும் என்பதற்காக, மத்திய அரசின் மீது வீண் பழியைச் சுமத்துவதா?’ என பா.ஜ., தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய அரசின் பங்கு என்ன, மாநில அரசின் பங்கு என்ன என்று எதுவும் தெரியாமல், வழக்கம்போல யாரோ எழுதிக் கொடுத்ததை அப்படியே முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டிருக்கிறார்.
கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கு நமது மத்திய அரசு சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் செலவு செய்ய ஒப்புதல் வழங்கிய விவரமாவது முதல்வருக்குத் தெரியுமா?.
கடந்த 2009 – 2014ம் ஆண்டு வரையில் ஆட்சியில் இருந்த திமுக காங்கிரஸ் கூட்டணி அரசு, தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்தது சுமார் ரூ. 800 கோடி மட்டுமே. ஆனால் பிரதமர் மோடி இந்த ஆண்டு மட்டும் ரூ.6,331 கோடிக்கான ரயில்வே திட்டங்களைத் தமிழகத்துக்கு வழங்கியுள்ளார். ஸ்டாலின் உண்மையில் இவை எல்லாம் தெரிந்துதான் பேசிக் கொண்டிருக்கிறாரா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.
கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட முழுமையாக நிறைவேற்றாமல், நேரத்திற்கொரு பேச்சு என்று நாடகமாடி, பொதுமக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் முதல்வர் ஸ்டாலின் அரசியலில் தங்கள் இருப்பைக் காட்டிக்கொள்ள வேண்டும் என்பதற்காக, மத்திய அரசின் மீது வீண் பழியைச் சுமத்துவதா?.
பிரதமர் மோடி வரும் காலங்களிலும் தமிழகத்தின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றுவார். ஆனால் இங்கு திமுக அரசோ, தாங்கள் செய்யவேண்டிய பணிகளை மறந்து மற்றவர்களை விமர்சிப்பதை முழு நேர வேலையாகக் கொண்டுள்ள போக்கை இனி வரும் காலங்களிலாவது மாற்றிக் கொள்ள வேண்டும். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.