சென்னை: அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் 2500க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் 19 மாதங்களாக ஓய்வூதிய பலன் கிடைக்காமல் காத்திருக்கின்றனர். தமிழகத்தில் உள்ள எட்டு அரசு போக்குவரத்து கழகங்களில் டிரைவர், கண்டக்டர், மெக்கானிக் என 1.21 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர்.
இதில், ஓய்வு பெற்றவர்களுக்கு 2022 டிசம்பர் முதல் வழங்க வேண்டிய வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை, விடுப்பு சம்பளம், ஓய்வூதிய சரண்டர் தொகை போன்றவை இதுவரை வழங்கப்படவில்லை. அந்த வகையில், தமிழகம் முழுவதும் 2,500க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதிய பலன்கள் கிடைக்கவில்லை.
இதுகுறித்து, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர் நல அமைப்பின் பொதுச் செயலர் கர்சன் கூறுகையில், “ஓய்வூதியம் பெறுவோருக்கு சராசரியாக, 20 லட்சம் ரூபாய் வரை கிடைக்கும். ஆனால், ஓய்வு பெறும்போது, வெறுங்கையுடன் அனுப்புகின்றனர். “இதுவரை, ஓய்வூதிய பலன் கிடைக்காமல் 150 பேர் உயிரிழந்துள்ளனர்.
அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நல நிவாரண சங்க மாநில தலைவர் கதிரேசன் கூறியதாவது:
“92 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஓய்வூதியம் பெறுகின்றனர். கடந்த 2015ம் ஆண்டு முதல், உதவித்தொகை உயர்த்தப்படாமல், குறைந்த ஓய்வூதியம் பெற்று, வறுமையில் வாடுகின்றனர்,” என்றார். அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, ’நிதி பற்றாக்குறை தொடர்கிறது. ஆனால், தமிழக அரசிடம் இருந்து கூடுதல் நிதி பெற்று, ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதிய பலன்களை படிப்படியாக வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்,” என்றார்.