நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருவதால், பல இடங்களில் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நீலகிரி மாவட்டத்தில் ஒரு சில பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கொட்டும் மழை
மேற்கு திசை காற்றின் வேகத்தில் ஏற்படும் மாற்றத்தால் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன் படி இரவில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது.
இடி மின்னல் மழை
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வரும் 23ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35°-36°C ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27°-28°C ஆகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீலகிரி மாவட்டத்தில் மழை பாதிப்பு
இந்நிலையில், கேரள மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக நீலகிரி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அவசர உதவிக்கான தொலைபேசி எண்களையும் அறிவித்துள்ளார்
3 தாலுக்கா பள்ளிகளுக்கு விடுமுறை
இந்நிலையில் தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள 3 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உதகை, குன்னூர், குந்தா ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ளார்.