உலகம் முழுவதும் பக்ரீத் பண்டிகை இன்று ஆரம்பமாகியுள்ளது. ஆனால், வெறும் பண்டிகை கொண்டாட்டமாக இல்லாமல் துன்பங்களுக்கிடையிலும் நம்பிக்கையை நிலைநாட்டும் நாளாக காசா மக்கள் இதை அனுபவித்து வருகின்றனர். பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியாக இருக்கும் காசா தற்போது இஸ்ரேலுடன் கடும் போர் சூழ்நிலையில் உள்ளது. இந்த தொடரும் தாக்குதல்களில் இதுவரை 50,000க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர்.

இப்படியான கட்டுக்கடங்காத நெருக்கடிக்குள்ளாகி இருக்கும் நிலையில், இன்று காசா மக்கள் பக்ரீத் தொழுகையை வெகுசந்தோசமாக நடத்தினர். சாமானிய வாழ்வின் அடிப்படையான உணவு, குடிநீர், மருந்துகள், உறைவிடங்கள் அனைத்திலும் கடும் தட்டுப்பாடுகளை சந்தித்தாலும், அவர்கள் தங்கள் பக்ரீத் வழிபாட்டை விட்டுவைக்கவில்லை.
இந்த தட்டுப்பாடுகள் இயற்கையாக ஏற்பட்டவை அல்ல. இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் அனுப்பும் மனிதாபிமான உதவிகளை இஸ்ரேல் கட்டுப்படுத்துவதால், அவை காசாவுக்கு வர முடியாத நிலை உருவாகியுள்ளது. இதன் விளைவாக, விலைவாசி பீக் கட்டத்தில் உள்ளது. எடுத்துக்காட்டாக, இந்தியாவில் வெறும் ஐந்து ரூபாய்க்கு கிடைக்கும் பிஸ்கெட் ஒரு பாக்கெட் காசாவில் 2300 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
இருப்பினும், காசா மக்கள் மசூதியின் இடிந்து போன பாகங்களிலேயே தொழுகை நடத்தி பக்ரீத் கொண்டாடினர். இரண்டாவது ஆண்டாக போர் சூழ்நிலையில் பக்ரீத் கொண்டாடும் அவர்களின் மனப்பாங்கு, அவர்களுக்கு இன்னமும் ஒரு நாள் அமைதியும் நிம்மதியும் கிடைக்கும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.
தமிழ்நாட்டிலும் பக்ரீத் பண்டிகை இன்று மகிழ்ச்சியுடன் தொடங்கியுள்ளது. முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது வாழ்த்துப் செய்தியில், பக்ரீத் என்பது தியாகத்தையும் பகிர்ந்துண்ணும் பண்பையும் போற்றும் திருநாள் என்றும், இஸ்லாமிய சமூகத்தின் கல்வி, பொருளாதார முன்னேற்றத்திற்கு மாநில அரசு தொடர்ந்து செயல்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பக்ரீத் மக்கள் மனதில் இறை உணர்வும், தியாக உணர்வும் மலரட்டும் எனத் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மனிதநேயம் மற்றும் மத நல்லிணக்கம் பரவ வாழ்த்துக்களை தெரிவித்தார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வபெருந்தகை, பக்ரீத் நமக்கு விடுக்கும் அழைப்பு ஒற்றுமை, சகோதரத்துவம், வெறுப்பை விலக்குதல் என்பதைக் கூறி, இந்த திருநாள் சமுதாயத்தில் மனிதம் வேரூன்றி வளர வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
காசா போன்ற இடங்களில் மனிதநேயமும் அமைதியும் வெல்லும் நாளை நோக்கி இந்த பக்ரீத் பெருநாள் ஒரு நம்பிக்கையின் வெளிப்பாடாக மாறி உள்ளது. பல இடங்களில் கொந்தளிக்கும் சூழ்நிலைகளையும் மீறி பக்ரீத் கொண்டாடும் மக்கள், உலகிற்கு நம்பிக்கையும் சகிப்புத் தன்மையும் என்னும் உண்மையான பொருள் என்ன என்பதை உணர்த்துகின்றனர்.