2019 ஆம் ஆண்டு சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பரவி பெரும் உயிரிழப்புகளையும், வாழ்வாதார சிக்கல்களையும் உருவாக்கியது. இந்த வைரஸ் சுவாசக்குழாய்கள், கல்லீரல் போன்ற உடலுறுப்புகளை பாதிப்பதுடன், நுரையீரல் செயலிழப்பு உள்ளிட்ட பிரச்சனைகளையும் ஏற்படுத்தியது. ஆரம்பத்தில் இதற்கான சிகிச்சை இல்லாததால், நோய் வேகமாக பரவிய நிலையில் மக்கள் வலியுடன் உயிரிழந்தனர்.

இந்த சூழ்நிலையில் மருத்துவர்கள் தடுப்பூசி கண்டறிந்து பொதுமக்களுக்கு வழங்கினார்கள். கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு போன்ற தடுப்பூசிகள் மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்த, பரவல் தாறுமாறாக இருந்த கட்டத்தில் கட்டுப்படுத்தப்பட்டது. இந்த வெற்றிக்குப் பிறகு உலகம் இயல்பு நிலைக்கு திரும்பியதுபோல் தோன்றியது. இருப்பினும், 2022ஆம் ஆண்டு சில உருமாற்றங்களை கொண்ட புதிய கொரோனா வகைகள் மீண்டும் பரவ தொடங்கின.
இந்நிலையில் தற்போது இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 391 புதிய தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதனுடன், மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,775 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் நான்கு பேர் உயிரிழந்ததாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர்கள் தமிழ்நாடு, கேரளா, மத்திய பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக கேரள மாநிலத்தில் தொற்று எண்ணிக்கை உயர்வாகக் காணப்படுகிறது. தமிழகத்தில் தற்போது 194 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 27 பேர் முழுமையாக குணமடைந்துள்ள நிலையில், 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிங்கப்பூர், தாய்லாந்து, ஹாங்காங் போன்ற ஆசிய நாடுகளில் கடந்த மாதத்தில் 16,000க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகினர். இந்தியா மற்றும் அதன் சுற்றுப்புற நாடுகளில் பரவியிருக்கும் என் பி 1.8 மற்றும் எல் எப் 7 ஆகிய உருமாற்றம் பெற்ற கொரோனா வகைகள் இதற்குக் காரணமாகக் கருதப்படுகின்றன.
மத்திய சுகாதாரத்துறை இதை மிகுந்த கவனத்துடன் கவனித்து வருகிறதெனவும், மக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. மீண்டும் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வும், சுகாதார நடைமுறைகளும் அவசியமாகின்றன.
பொதுமக்கள் முகக்கவசம் அணிதல், கைகளை சுத்தமாக வைத்திருத்தல், குமட்டல் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகளைப் புறக்கணிக்காமல் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுதல் போன்ற நடவடிக்கைகள் மூலம் பரவலை கட்டுப்படுத்த முடியும். அரசு மீண்டும் கட்டுப்பாடுகளை உறுதி செய்யும் வாய்ப்பும் இருப்பதால், விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டியது இன்றைய தேவை.