சென்னை: இந்தியாவில் உள்ள தங்க சேமிப்பில் சுமார் 40 சதவிகிதம் தமிழ்நாட்டில் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தங்க நகைகள் நம்முடைய வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறியுள்ளது. திருமணம், சுப நிகழ்வுகள், எதிர்கால சேமிப்பு என பல காரணங்களுக்காக தங்கம் வாங்கப்படும் நிலையில், அவசர தேவைக்காக அதனை அடகு வைத்து கடன் வாங்கும் நடைமுறையும் பரவலாக உள்ளது.

இதில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரிசர்வ் வங்கி வெளியிட்ட கடும் கட்டுப்பாடுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. வட்டி மற்றும் அசல் தொகையை முழுமையாக கட்டிய பிறகு தான் நகையை மீட்டுக்கொள்ள முடியும் என்ற விதிமுறைக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதே சமயம் நகை வாங்கிய பில்கள் கட்டாயம் இணைக்கப்பட வேண்டும் என்பதும், நகையின் மதிப்பில் 75 சதவிகிதம் மட்டுமே கடனாக வழங்கப்பட வேண்டும் என்பதும் மக்களிடம் சிரமத்தை ஏற்படுத்தியது.
இந்த சூழலில், மத்திய அரசு தலையிட்டு ரூ.2 லட்சம் வரை கடனுக்கு எந்த விதியும் அமல்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தியது. இதை ஏற்று, ரிசர்வ் வங்கி புதிய விதிகளை அறிவித்துள்ளது. அதன் கீழ், ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள நகைக்கு 85 சதவிகிதம் வரை கடன் பெற முடியும். ரூ.2.5 லட்சத்துக்கு மேல், ரூ.5 லட்சம் வரை 80 சதவிகிதம், மேலும் அதிகமான தொகைக்கு 75 சதவிகிதம் கடனாக வழங்கப்படும்.
முக்கியமாக, நகையின் உரிமைக்கான ஆவணங்கள் தேவைப்படாது. ரூ.2.5 லட்சம் வரை எந்த பில்லும் கேட்கப்படாது. ஆனால் அதிகமாக நகைக்கடன் பெறுபவர்கள் கண்காணிக்கப்படுவார்கள். மீட்கப்படாத நகைகள் ஏலத்திற்கு விடும்போது, அவை நகை மதிப்பின் குறைந்தபட்சம் 90 சதவிகிதத்தில் ஏலமாக வேண்டும் என்ற கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் மக்களால் எதிர்பார்க்கப்பட்ட ஒரு முக்கிய மாற்றமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடந்த வருடம் அறிவித்தபடி, 12 மாதங்களுக்கு பிறகு நகைக்கடனை புதுப்பிக்க முடியாது, முழுத் தொகையை கட்டிவிட்டாலே மீண்டும் கடன் பெறலாம் என்ற விதி நீக்கப்பட்டுள்ளது. இனி வழக்கம் போல, வருட முடிவில் வட்டியை மட்டும் கட்டியும், கூடுதல் கடனாக மாற்றியும் நகை கடனை தொடர முடியும்.
தங்கத்தின் விலை கடந்த சில ஆண்டுகளில் இரட்டிப்பு அளவில் உயர்ந்த நிலையில், இந்த விதிமாற்றங்கள் நிதிநெருக்கடியை சந்திக்கும் பொதுமக்களுக்கு பெரும் நிவாரணமாக அமைந்துள்ளன. தமிழ்நாட்டில் தங்கம் பெரிதும் சேமிக்கப்படும் மாநிலமாக இருக்கும்போது, இத்தகைய சீரமைப்புகள் மக்களின் நம்பிக்கையை மீட்டுவைக்கின்றன.