வீட்டில் எலிகள் தொல்லை இருந்தால் அதை அவ்வுளவு எளிதில் தீர்க்க முடியாது. உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இந்த எலிகளால் நமக்கு வரும் தலைவலி கொஞ்ச நஞ்சமல்ல. இவற்றை வீட்டை விட்டு வெளியேற்றினால் தான் நம்மால் நிம்மதியாக தூங்க கூட முடியும். ஆனால் சமீபத்திய அறிக்கையின்படி, சில முறைகள் மூலம் எலிகளை வீட்டை விட்டு எளிதாக வெளியேற்ற முடியும் எனக் கூறுகிறார்கள். அது என்னவென்று பார்ப்போமா? மழைக்காலம் வேறு வந்துவிட்டது. மழை அதிகரிக்கத் தொடங்கியதுமே ஒவ்வொரு வீடுகளிலும் எலி தொல்லைகளும் அதிகரித்துவிடும். இந்த எலிகள் சும்மாவும் இருப்பதில்லை.
நம்முடைய உணவை உண்பதுடன், ஆடைகளை கிழித்தும் நம் வாழ்க்கையை அவலமாக்குகின்றன. வீட்டின் அறையைச் சுற்றிலும் எலிகள் ஓடினால் யாருக்குதான் பிடிக்கும்? உணவை வீணாக்குவது முதல் ஆடைகள், காகிதங்களை கிழிப்பது வரை இந்த சிறிய உயிரினம் செய்யும் இடைஞ்சல்கள் கொஞ்சநஞ்சம் அல்ல. நமக்கு பல்வேறு நோய்கள் வருவதற்கும் இந்த எலிகளே காரணமாக இருக்கின்றன. பலர் தங்கள் வீட்டில் உள்ள எலிகளை அகற்ற எவ்வளவோ முயற்சிகளை செய்கிறார்கள்.
இது போதாதென்று எலிகளைக் கொல்ல கடைகளிலும் பல்வேறு மருந்துகள் கிடைக்கின்றன. ஆனால் எலிகளை மருந்துகள் வைத்து கொல்வதால் நமக்கு இன்னொரு பிரச்சனையும் சேர்ந்தே வருகிறது. இறந்த எலி வீட்டில் எந்த இடத்தில் விழுந்து கிடக்கிறது என நம்மால் எளிதில் கண்டுபிடிக்க முடியாது. அதோடு அதிலிருந்து வரும் துர்நாற்றம் தாங்க முடியாததாக இருக்கும். பொதுவாக எலிகள் நம் வீட்டில் உள்ள உணவுப்பொருட்களாலேயே பெரும்பாலும் ஈர்க்கப்படுகின்றன.
எனவே உங்கள் வீட்டை சுத்தமாகவும் நேர்த்தியாகவும் வைத்திருப்பது அவசியம். உணவை காற்று புகாத வகையிலான பாத்திரங்களில் மூடி வைக்க வேண்டும். உணவுகள் கீழே விழுந்திருந்தால் அவற்றை உடனடியாக சுத்தம் செய்ய வேண்டும்.உங்கள் வீட்டில் ஏற்கனவே எலிகள் இருந்தால், அவற்றைப் பிடிக்க பொறிகள் சிறந்த வழியாகும். பல வகையிலான பொறிகள் கிடைக்கின்றன. அவற்றில் ஏதேனும் ஒன்றை நாம் பயன்படுத்தலாம். பொறியின் உள்ளே எலிகளைப் பிடிக்க அவற்றை தூண்டும் வகையிலான உணவுப்பொருட்களை பயன்படுத்தலாம். வேர்க்கடலை, வெண்ணெய், சாக்லேட் மற்றும் சீஸ் போன்ற பொருட்களை பயன்படுத்தலாம்.