சிந்து நதிநீர் ஒப்பந்தத்திலிருந்து இந்தியா விலகியதைத் தொடர்ந்து, அந்த நீரை பாகிஸ்தான் அல்லாமல் பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு மாற்றி அனுப்ப மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக புதிய கால்வாய்கள் கட்டப்பட உள்ளன என்ற தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில், ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா அதனை கடுமையாக எதிர்த்துள்ளார்.

மத்திய அரசின் திட்டத்திற்கு எதிராகக் கருத்து தெரிவித்த அவர், “ஜம்முவில் வறட்சி நிலவுகிறது. இங்கேயே தண்ணீர் இல்லையெனில், பஞ்சாபுக்கு எப்படி தர முடியும்?” என்றார். மேலும், “எப்போதாவது பஞ்சாப் எங்களுக்கு தண்ணீர் கொடுத்ததுண்டா?” என்ற கேள்வியும் எழுப்பினார். இது ஒரு மாநிலம் மட்டுமல்ல, நீர் உரிமை குறித்த நுட்பமான பிரச்சினையை வெளிப்படுத்துகிறது.
1979ம் ஆண்டு பதான்கோட்டில் உள்ள ஷாப்பூர் கண்டி அணை தொடர்பாக ஜம்மு மற்றும் பஞ்சாப் இடையே ஏற்பட்ட முரண்பாடும், 2018ம் ஆண்டில் மட்டுமே முடிவுக்கு வந்ததையும் உமர் அப்துல்லா சுட்டிக்காட்டினார். அந்த அணையின் மூலம் பாகிஸ்தானுக்குச் செல்லும் ரவி நதிநீர் தடுக்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஜல் சக்தி அமைச்சகம் சிந்து நதிநீரை பாகிஸ்தான் பயன்படுத்த வேண்டாம் என்பதற்காக உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளை தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. ஆனால், இந்த முடிவுகள் மற்ற மாநிலங்களுடன் உள்ள நீர் பகிர்வு சர்ச்சையை மேலும் தீவிரமாக்கும் அபாயம் உள்ளது. நீர் உரிமையின் பெயரில் மாநிலங்களுக்குள் உறவுகள் சீரழியக்கூடிய சூழ்நிலை உருவாகிவருகிறது.