பாகிஸ்தானுடன் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு, இந்தியா தனது பாதுகாப்பு உள்கட்டமைப்பை மேம்படுத்தும் பணியில் தீவிரமடைந்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை (AMCA) முழுமையாக உள்நாட்டில் உருவாக்க மத்திய அரசு முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
‘மேட் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் இந்த விமானங்களை தயாரிக்க அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து செயல்பட உள்ளன. இந்த திட்டம் இந்தியாவின் மிகப்பெரிய ராணுவ ஆராய்ச்சி முயற்சியாகக் கருதப்படுகிறது.

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் வழங்கியதைத் தொடர்ந்து, விமான மேம்பாட்டு நிறுவனம் ADA, தயாரிப்பு ஆர்வமுள்ள நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்தப் பணிக்கான காலக்கெடு எட்டு ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நிறுவனங்கள் தனித்தனியாகவோ அல்லது கூட்டமைப்பாகவோ ஈடுபடலாம். முக்கியமாக, விமான வடிவமைப்பு, உற்பத்தி, சோதனை உள்ளிட்ட துறைகளில் அனுபவம் உள்ள நிறுவனங்கள் மட்டுமே இந்த திட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படுகின்றன.
மத்திய அரசு இதற்கான ‘Expression of Interest’ (EoI) அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம், எந்த நிறுவனங்கள் இந்த திட்டத்தில் ஆர்வமுள்ளன என்பதை அறிய முயல்கிறது. பட்டியலிடப்படும் நிறுவனங்கள் தொடர்ச்சியான உற்பத்திக்கு தேவையான உற்பத்தி ஆலையை அமைக்கும் திறனும் கொண்டிருக்க வேண்டும்.
2025 முதல் 2030 வரை இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தி, இந்திய விமானப்படையின் முக்கிய பகுதியாக AMCA விமானங்களை மாற்றுவதே மத்திய அரசின் இலக்காக உள்ளது.
இது போல தேசத்தில் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி உறுதி செய்யும் முயற்சிகள் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.