சென்னை: தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி சுற்றுலா வாய்ப்பு விரைவில் வழங்கப்பட உள்ளது. பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இதை அறிவித்துள்ளார். மாணவர்கள் திறமையை வளர்த்துக்கொள்ள கல்வியுடன் கலை, பண்பாடு ஆகியவை இணைந்திருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். பிள்ளைகளை மற்றவர்களுடன் ஒப்பிடும் பழக்கத்தை பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித் துறை சார்பில் கலை நிகழ்ச்சிகளை ஊக்குவிக்க கலைத்திருவிழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 282 மாணவர்கள் செம்மஞ்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் 6 நாள் பயிற்சி பெற்றனர். ஓவியம், சிற்பம், நாட்டியங்கள், நாடகம், பொம்மலாட்டம் உள்ளிட்ட கலைகளில் பயிற்சி அளிக்கப்பட்டது. திறமை காட்டியவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.
அமைச்சர் கூறுகையில், 3 ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய கலைச்சிற்பி திட்டத்தில் முதலில் 34 லட்சம் பேர் பங்கேற்றனர். தற்போது 60 லட்சம் பேர் பங்கேற்று வருகின்றனர். மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும் இதே போன்று பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளி மாணவர்களை கீழடி போன்ற தொல்லியல் தளங்களுக்கு அழைத்துச் செல்லும் திட்டம் விரைவில் தொடங்கப்படும். இதன் மூலம் மாணவர்கள் நமது பண்பாட்டை நேரில் கற்றுக்கொள்ள வாய்ப்பு பெறுவார்கள். இது மட்டும் அல்லாது கல்வி இணை செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் மாணவர்களை வெளிநாட்டு சுற்றுலாவுக்கும் அழைத்துச் செல்ல திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
இதற்கிணங்க, பள்ளிக் கல்வித் துறை நடத்திய போட்டிகளில் வெற்றி பெற்ற 22 மாணவர்கள் ஜெர்மனி நாட்டிற்கு நான்கு நாள் கல்வி சுற்றுலாவிற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மாணவர்கள் மதிப்பெண்கள் மட்டுமல்ல, அவர்களின் தனித்திறனும் முக்கியம் என்பதையும் அமைச்சர் வலியுறுத்தினார்.