புதுடெல்லி: பரந்தூர் விமான நிலையத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் புதிய பசுமை விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னையை அடுத்துள்ள இந்த விமான நிலையத்திற்காக பாரந்தூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்கள் உட்பட 5,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது.
தமிழக அரசுக்கு சொந்தமான, ‘டிட்கோ’ எனப்படும், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம், பரந்துார் விமான நிலைய கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த விமான நிலையத்திற்கு அனுமதி கோரி சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திற்கு டிட்கோ கடிதம் எழுதியிருந்தது.
இந்நிலையில், தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று, பரந்தூர் விமான நிலையத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்தத் தகவலை தெலுங்கு தேசத்தைச் சேர்ந்த சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு சமீபத்தில் ராஜ்யசபாவில் தெரிவித்தார். இதுகுறித்து அவர் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், ‘பசுமை விமான நிலையக் கொள்கை – 2008ன்படி, பரந்தூர் விமான நிலையத்துக்கு அனுமதி கோரி தமிழக அரசின் டிட்கோ சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
“விரிவான ஆலோசனைகளுக்குப் பிறகு, பசுமை விண்வெளி விமான நிலையங்களுக்கான வழிகாட்டுதல் குழு கடந்த ஜூலை மாதம் பரந்தூர் விமான நிலையத்திற்கு ஒப்புதல் அளித்தது” என, குறிப்பிடப்பட்டுள்ளது.