‘த்ரிஷ்யம்’ என்பது மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கிய 2013-ம் ஆண்டு வெளியான படம். த்ரிஷ்யம் படத்தின் கதை, ஒரு சாதாரண மனிதன் தனது குடும்பத்தைப் பாதுகாக்க எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் எதிர்பாராத திருப்பங்களைப் பற்றியது. மலையாளத்தில் வெற்றி பெற்ற இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, சிங்களம் மற்றும் பிற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.

இது சீன மொழியில் ரீமேக் செய்யப்பட்ட முதல் இந்தியத் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ‘த்ரிஷ்யம்’ மற்றும் ‘த்ரிஷ்யம் 2’ படங்கள் ஹாலிவுட்டிலும் ரீமேக் செய்யப்படுகின்றன. 2013-ம் ஆண்டு த்ரிஷ்யத்தின் முதல் பாகத்தின் இந்தி ரீமேக்கைத் தயாரித்த பனோரமா ஸ்டுடியோஸ் இன்டர்நேஷனல் லிமிடெட், அமெரிக்க நிறுவனங்களான கல்ஃப்ஸ்ட்ரீம் பிக்சர்ஸ் மற்றும் ஜாட் பிலிம்ஸ் ஆகியவற்றுடன் இணைந்து ஹாலிவுட்டில் இதைத் தயாரிக்க உள்ளது.
த்ரிஷ்யம் கொரிய மொழியில் ரீமேக் செய்யப்பட்ட நிலையில், பனோரமா ‘த்ரிஷ்யம்’ படங்களை 10 மொழிகளில் ரீமேக் செய்ய முடிவு செய்துள்ளது. படத்தின் மூன்றாம் பாகம் சில மாதங்களுக்கு முன்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், படப்பிடிப்பு அக்டோபரில் தொடங்கும் என்று குழு இப்போது அறிவித்துள்ளது.