சென்னை: தமிழக பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத் துறை செயலர் சி.விஜயராஜ் குமார் நேற்று வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த 2021-ம் ஆண்டு அமைக்கப்பட்ட தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் நல ஆணையத்தின் பதவிக்காலம் முடிந்துவிட்டதால், பின்வரும் தலைவர், துணை தலைவர், உறுப்பினர்களை உள்ளடக்கி புதிய ஆணையத்தை அரசு அமைத்துள்ளது.
இந்த ஆணையத்தின் தலைவராக கத்தோலிக்க திருச்சபை பாதிரியார் ஜோ அருண் செயல்படுவார். எம்.எம்.அப்துல் குத்தூஸ் என்ற இறையன்பன் குத்தூஸ், ஹேமில்டன் வில்சன், ஏ.சொர்ணராஜ், நாகூர் ஏ.எச்.நஜிமுதீன், பிரவீன்குமார் தப்லா, ராஜேந்திர பிரசாத், ரமீட் கபூர், ஜெ.முகமது ரபி, எஸ்.வசந்த் ஆகிய 9 பேர் இதன் உறுப்பினர்களாக நியமிக்கப்படுகின்றனர்.
ஆணையத்தின் துணை தலைவராகவும் அப்துல் குத்தூஸ் செயல்படுவார். இந்த புதிய ஆணையத்தின் பதவிக்காலம் 2024 ஜூலை 23 (நேற்று) முதல் 3 ஆண்டுகள் ஆகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக பீட்டர் அல்போன்ஸ் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.