ஈரான்: ஈரான் நாடாளுமன்றத்தில் ஸ்ட்ரெயிட் ஆஃப் ஹார்மோஸ் வழித்தடத்தை மூட அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பல நாடுகளில் கச்சா எண்ணெய் விலை உயர வாய்ப்புள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளன.
முக்கிய கடல் வழியான ஸ்ட்ரெயிட் ஆஃப் ஹார்மோஸை மூடிவிட்டால் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கச்சா எண்ணெய் விலை உயர வாய்ப்புள்ளது.
ஸ்ட்ரெயிட் ஆஃப் ஹார்மோஸ் வழியாக உலக நாடுகளுக்குத் தேவையான 5-ல் ஒரு பங்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. இதனால், அமெரிக்கா போன்ற நாடுகளும் பாதிக்கப்படும் சூழல் உருவாகும்.
(வடக்கு) ஈரான் – ஓமன் – ஐக்கிய அரபு அமீரகம் (தெற்கு) ஆகிய மூன்று நாடுகளுக்கிடையே ஸ்ட்ரெயிட் ஆஃப் ஹார்மோஸ் கடல் வழித்தடம் அமைந்துள்ளது. இது 30 கி.மீ. நீளமுடையது.
பாரசீக வளைகுடா, அரபிக் கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் ஆகிய மூன்றையும் இணைக்கும் வகையில் உள்ளதால், இதன் வழியே உலக நாடுகளுக்குத் தேவையான கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவில் 20% கொண்டுசெல்லப்படுகிறது.
இந்த வழித்தடத்தை மூடுவதற்கு ஈரான் நாடாளுமன்றத்தில் இன்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
ஸ்ட்ரெயிட் ஆஃப் ஹார்மோஸ் வழித்தடத்தை ஈரான் மூடுவதை ஊக்குவிக்கக் கூடாது என சீனாவிடம் அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் மார்கோ ரூபியோ இன்று கேட்டுக்கொண்டார்.இதனை ஈரான் செய்தால், அது பொருளாதார தற்கொலைக்குச் சமம் என்றும், ஈரான் செய்யும் மிகப்பெரிய தவறு எனவும் குறிப்பிட்டார்.
ஈரானின் இத்தகைய நடவடிக்கை அமெரிக்க பொருளாதாரத்தை விட மற்ற நாடுகளின் பொருளாதாரத்தையே பாதிக்கும் என்பதால், அமெரிக்கா இதில் அக்கறையுடன் செயல்படுவதாகவும் தெரிவித்தார். இதனிடையே ஸ்ட்ரெயிட் ஆஃப் ஹார்மோஸ் வழித்தடத்தை மூட ஈரான் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாகத் தெரிகிறது.