சென்னை: வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ள திமுக எம்.பி ஆ.ராசா இன்று சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினார். இந்த வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நீதிபதி அதை தள்ளிவைத்து ஜூன் 30க்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளார்.

2015ஆம் ஆண்டு சிபிஐ, ஆ.ராசா மற்றும் அவரது உறவினர், நண்பர்கள் மற்றும் சில நிறுவனங்களின் மீது ரூ.5.53 கோடி மதிப்புள்ள 579% அதிக சொத்து குவித்ததாக வழக்குப் பதிவு செய்தது. இது கடந்த 2023ம் ஆண்டு குற்றப்பத்திரிகையாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்து வந்த சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த வாரம் ஆ.ராசா வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய கோரி மனுத் தாக்கல் செய்தார். ஆனால், சிபிஐ தரப்பில் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் நீதிபதி அந்த மனுவை தள்ளுபடி செய்தார்.
இந்நிலையில், இன்று ஆ.ராசா மற்றும் மற்ற மூன்று பேர் நேரில் ஆஜராக, புதிய மனுவொன்றை தாக்கல் செய்தனர். நீதிபதி அதற்கான பதில் மனுவை சிபிஐ தரப்பில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, குற்றச்சாட்டு பதிவு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. பின்னர், மீடியாக்களிடம் பேசிய ஆ.ராசா, “புதிய நீதிபதி வந்திருப்பதால் மரியாதையோடு ஆஜர் ஆனேன். குற்றச்சாட்டு இன்னும் பதிவு செய்யப்படவில்லை” என கூறினார்.