சென்னை: பள்ளிக் கல்வித் துறை சார்பாக மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான 2 நாள் ஆய்வுக் கூட்டம் சென்னையில் நேற்று தொடங்கியது. நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் உள்ள தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் சேவைகள் கழக மாநாட்டு அரங்கில் பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை செயலாளர் பி.சந்திரமோகன், எஸ்எஸ்ஏ மாநில திட்ட இயக்குநர் மா.ஆர்த்தி, மாதிரிப் பள்ளிகள் உறுப்பினர் செயலாளர் சுதன், பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்குநர் பி.ஏ.நரேஷ், அரசுத் தேர்வுகள் இயக்குநர் ந.லதா, மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் உமா, தனியார் பள்ளிகள் இயக்குநர் குப்புசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
காலை கூட்டத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட 13 மாவட்டங்களைச் சேர்ந்த கல்வி அலுவலர்களும், பிற்பகல் கூட்டத்தில் திருச்சி, பெரம்பலூர், கடலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 12 மாவட்ட அலுவலர்களும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாவது:- பள்ளிக் கல்வித் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் மாணவர்களுக்கான அனைத்து கல்வி உதவித்தொகைகளும் முறையாக அவர்களைச் சென்றடைகிறதா என்பதை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

நடப்பு கல்வியாண்டில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பள்ளி திறந்த அன்றே மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள், குறிப்பேடுகள், சீருடைகள் உள்ளிட்ட 14 வகையான நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்த மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பாராட்டுகள். தேர்ச்சி விகிதம் குறைவாக உள்ள மாவட்டங்களில் காரணங்களைக் கண்டறிந்து அவற்றை சரிசெய்ய உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
கருணை அடிப்படையில் பணி நியமனம் கோரி பெறப்படும் மனுக்களை உடனடியாக ஆய்வு செய்து, இறந்த ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வாரிசுதாரர்களை நியமிக்க வசதியாக பள்ளிக் கல்வி இயக்குநருக்கு அனுப்ப வேண்டும். போக்சோ வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது உடனடியாக விசாரணை நடத்தி, அறிக்கையை சம்பந்தப்பட்ட இயக்குநரகத்திற்கு அனுப்ப வேண்டும். மேலும், நிலுவையில் உள்ள நீதிமன்ற வழக்குகள் தொடர்பான கோப்புகளில் சிறப்பு கவனம் செலுத்தி, அவற்றை உடனடியாக முடிக்க வேண்டும். குழந்தை திருமணத்தைத் தடுக்க சமூக நலத்துறை அதிகாரிகளுடன் இணைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொடக்கக் கல்வி இயக்குநரகத்தில் ஜூலை மாத இறுதிக்குள் 2,346 மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களை நியமிக்கும் பணி நடைபெற்று வருகிறது. எனவே, நிலுவையில் உள்ள நீதிமன்ற வழக்குகளை விரைவாக முடிக்க ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இன்று நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களைச் சேர்ந்த கல்வி அதிகாரிகள் பங்கேற்பார்கள்.