சென்னை மெட்ரோ ரயில் சேவையில் இன்று காலை தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. குறிப்பாக, பச்சை வழித்தடமான கோயம்பேடு – அசோக் நகர் இடையில் இந்த பிரச்சினை உருவானது. இதனால் செயிண்ட் தாமஸ் மவுண்ட் முதல் சென்னை சென்ட்ரல் வரை ரயில் சேவை 24 நிமிடங்களுக்கு ஒருமுறை மட்டுமே இயக்கப்பட்டது. மற்ற வழித்தடங்களில் உள்ள ரயில்கள் வழக்கமான நேர அட்டவணையின்படி இயக்கப்பட்டன.

இந்த தாமதம் காலை பீக் ஹவரில் வேலைக்கு, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்ல விரைந்த பயணிகளுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியது. அதேசமயம் ஆட்டோ, கேப் உள்ளிட்ட தனியார் போக்குவரத்து சேவைகளின் கட்டணங்களில் உயர்வு காணப்பட்டது. பொதுப் போக்குவரத்தில் கூடுதல் பிணைப்பு ஏற்பட்டது. குறிப்பாக 7 மணி முதல் 9 மணி வரை பயணிகள் பெரும் குழப்பத்தில் இருந்தனர்.
மாநகர மெட்ரோ பொறியாளர்கள் இந்த கோளாறு தொடர்பாக உடனடியாக பழுதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 40 நிமிடங்களுக்கு பிறகு சேவை மீண்டும் இயல்புக்கு திரும்பியது. மெட்ரோ நிர்வாகம் (CMRL) தனது எக்ஸ் பக்கத்தில் ரயில் சேவை தற்போது வழக்கப்படி நடைபெறுகிறது என்று அறிவித்தது. இந்த செய்தி பயணிகள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தியது.
விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரையிலும், சென்னை சென்ட்ரல் முதல் செயிண்ட் தாமஸ் மவுண்ட் வரையிலான அனைத்து வழித்தடங்களிலும் தற்போது மெட்ரோ ரயில்கள் நிர்ணயிக்கப்பட்ட நேர அட்டவணையின்படி இயங்குகின்றன. முதற்கட்டமாக ஏற்பட்ட சேவை தாமதம் ஒரு குறுகிய கால அவதியாக இருந்தாலும், காலை நேர வேலைப்பயணிகளுக்கு இது நெருக்கடியை ஏற்படுத்தியது. இதுபோன்ற தொழில்நுட்ப கோளாறுகள் மீண்டும் ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.