திருப்பத்தூரில் நடந்த நலத்திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அண்ணாவின் பெயரை அரசியல் அடமானமாக பயன்படுத்துவதை கடுமையாக கண்டித்தார். மதுரையில் இந்து முன்னணி மற்றும் பாஜகவின் முருகன் மாநாட்டில், பெரியார் மற்றும் அண்ணாவை விமர்சிக்கும் வீடியோ ஒளிபரப்பபட்டது. இந்த நிகழ்வில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்றிருந்தனர்.

இந்த வீடியோ வெளியானபின், அதிமுக எந்த எதிர்ப்பும் பதிவு செய்யவில்லை என்ற குற்றச்சாட்டை ஸ்டாலின் முன்வைத்தார். அதிமுக வெறுமனே பார்த்துக்கொண்டது என அவர் குற்றம்சாட்டினார். இதுபோன்ற அரசியல் நாடகங்களுக்கு மதம் ஒரு கருவியாக பயன்படுத்தப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
பாஜகவும், அதிமுகவையும் சேர்த்து தமிழ்நாட்டில் மத அரசியலை ஊக்குவிக்க முயற்சி நடைபெற்று வருகிறது. மதத்தை வைத்து மக்களைப் பிரிப்பதுதான் இவர்களின் நோக்கம். இது தமிழகத்துக்கு அபாயகரமான கூட்டணி என்று ஸ்டாலின் கூறினார். மதத்தின் பெயரில் அரசியல் செய்வதை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றும் எச்சரித்தார்.
மகளிர் உரிமைத்தொகை விஷயமாக, சில பகுதிகளில் பெறாதவர்கள் இருந்தாலும், ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் அதை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
அதிமுக, பாஜக கூட்டணியில் தமிழ்நாட்டிற்கு எந்த வளர்ச்சியும் செய்யப்படவில்லை என்றும், அதனால் தான் மதம் மற்றும் கடவுளின் பெயரால் வாக்கு கேட்கிறார்கள் என்றும் ஸ்டாலின் விமர்சித்தார். 4 ஆண்டுகளில் 3000 கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது என்பதையே பாஜக மறைக்க முயல்கிறது.
அண்ணாவின் பெயரில் கட்சி நடத்தி, அந்த பெயரையே அரசியல் சொத்தாக பயன்படுத்துவது வீரம் அல்ல. இந்நிலையில், அந்த கட்சி நாளை தமிழ்நாட்டையே அடமானம் வைக்கும் நிலை உருவாகக்கூடாது என முதல்வர் எச்சரிக்கை விட்டுள்ளார்.