கேரள மாநிலம் எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், கண்ணூர், கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை தீவிரமடைந்துள்ளது. பலத்த காற்றுடன் கூடிய மழையால் மரங்கள் சாய்ந்து விழுந்து மின்கம்பங்கள் முறிந்துள்ளன, இதனால் பல இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். ஆறுகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து, வெள்ளம் அபாய கட்டத்தை கடந்துள்ளது. மூவாட்டுப்புழா, பாரதப்புழா, பம்பா, அச்சன்கோவில், கபானி உள்ளிட்ட பல ஆறுகள் அபாய நிலையை கடந்துவிட்டன.

வயநாடு மாவட்டத்தில் முண்டக்கை–சூரல்மாலா பகுதியில் பெய்த தொடர்ந்து பெய்த மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பெய்லி பாலம் அருகே கரை அரிந்துவிட்டதால் அதிர்ச்சி நிலவுகிறது. கடந்த வருடம் இதே பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தற்போது பல மாவட்டங்களில் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இந்திய வானிலை மையம், எர்ணாகுளம், திருச்சூர், இடுக்கி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ அறிவித்துள்ளது. ஏராளமானோர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில் ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில் மேகவெடிப்பு காரணமாக கடும் மழை மற்றும் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. தர்மசாலா அருகே உள்ள நீர்மின் திட்டத் தொழிலாளர்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். இதுவரை நான்கு உடல்கள் மீட்கப்பட்டுள்ளன, மேலும் பலர் காணாமல் போயுள்ளனர். குல்லுவிலும் வெள்ளம் வீடுகள், கடைகள், பாலங்களை அடித்து சென்றுள்ளது. மூன்று பேர் இதுவரை பலியாகியுள்ளனர், மேலும் சிலர் மீட்கப்பட்ட நிலையில் சிலர் காணாமல் போயுள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலும் மேகவெடிப்பு காரணமாக ஆற்றுகளில் திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. ரஜோரி மாவட்டத்தில் கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருந்த மூன்று சிறுவர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். இதில் இருவர் உயிரிழந்தனர். தோடா, பூஞ்ச், கதுவா, ராம்பன் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் அதிகாரிகள் எச்சரிக்கையை பிறப்பித்து, ஆறுகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளின் அருகே செல்லத் தடை விதித்துள்ளனர்.