செவ்வாய் கிரகம் நீண்ட காலங்களுக்கு முன்பே வாழ்நிலையற்றதாக மாறி விட்டதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். ஆனால், அந்த மாற்றம் எப்படி நிகழ்ந்தது? ஒரு காலத்தில் செவ்வாயில் இருந்த நீர் எப்படி காணாமல் போனது? கிரகத்தில் காணப்படும் பிளவுகள் எதனால் ஏற்பட்டது? என்பவை நீண்ட நாட்களாக பதில் இல்லாத கேள்விகளாகவே இருந்தன. இந்நிலையில், நாசாவின் கியூரியாசிட்டி ரோவர் மூலம் தற்போது பெரும் தகவல் வெளியாகியுள்ளது.

‘Gale’ பள்ளத்தாக்கு பகுதியில் நடைபெற்ற சமீபத்திய ஆய்வுகளில், ரோவர் எடுத்த புகைப்படங்களில் வலை போன்ற பாறை அமைப்புகள் (‘boxwork’) காணப்பட்டுள்ளன. இவை சிலந்தி வலை போல தோன்றினாலும், அது இயற்கையான வெட்டுகளைப் பிரதிபலிக்கின்றது. இதில் முக்கியமாக, நீர் நிலத்தடிக்கு சென்ற பாதைகளின் தடயங்கள், நீண்ட காலமாக ஏற்பட்ட காற்றின் அரிப்புகள், மற்றும் சல்பேட் கனிமங்கள் உள்ளடக்கம் போன்றவை தெளிவாகக் கண்டறியப்பட்டுள்ளன.
இந்த பாறைகளில் ‘கால்சியம் சல்பேட்’ கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது நிலத்தடி நீர் ஆவியாகும்போது உருவாகும் உப்பு வகை என விஞ்ஞானிகள் விளக்குகின்றனர். இதுவே, நீர் நிலத்தடியில் பாய்ந்து போயிருப்பதற்கான முக்கிய ஆதாரமாக பார்க்கப்படுகிறது. இது போல் ‘மக்னீசியம் சல்பேட்’ கூட நாசா கண்டுபிடித்துள்ளது. இது உப்புத்தன்மை வாய்ந்த நீரில் உயிர்கள் தோன்ற வாய்ப்பு இருப்பதைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது.
அமெரிக்காவின் ஜெட் புரொபல்ஷன் ஆய்வகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி அபிகாயில் ஃபிரேமன் கூறுகையில், இந்த வகை பாறைகள் பெரும் பரப்பளவில் பரவியுள்ளதைக் கியூரியாசிட்டி ரோவர் தற்போது தான் கண்டுபிடித்துள்ளது என்றும், இது செவ்வாயில் உயிர்கள் இருந்ததற்கான தேடலுக்கு வலு சேர்க்கும் எனக் கூறியுள்ளார். இந்த அதிரடி தகவல்கள் மூலம் செவ்வாய் கிரகம் பற்றி உள்ள கொள்கைகளில் புதிய வலுவான புரிதல்கள் உருவாகி வருகின்றன.