நாட்டிலேயே முதல் முறையாக, அயோத்தி ராமர் கோவிலில் விரைவில் டைட்டானியம் ஜன்னல் கிரில்கள் நிறுவப்படும். இது தொடர்பாக, ஸ்ரீ ராம ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளைத் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா நேற்று கூறியதாவது:- நாட்டிலேயே முதல் முறையாக, அயோத்தி ராமர் கோவிலில் உள்ள ஜன்னல் கிரில்கள் டைட்டானியம் உலோகத்தால் நிறுவப்படும். இது தனித்துவமானது. ஏனெனில் இந்த உலோகம் மிக நீண்ட ஆயுட்காலம் கொண்டது.
அதாவது, இதன் ஆயுட்காலம் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலானது. மேலும், டைட்டானியம் மற்ற உலோகங்களுடன் ஒப்பிடும்போது வலிமையானது மற்றும் இலகுவானது என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது. ராமர் கோவிலுக்கு பன்சி பஹார்பூரிலிருந்து சுமார் 14 லட்சம் கன அடி கற்களை கொண்டு வர திட்டமிடப்பட்டது. இதில், மீதமுள்ள லட்சம் கன அடி கற்கள் இப்போது பயன்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

ஸ்ரீ ராம ஜென்மபூமி அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் கடந்த வாரம், “ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் இறுதிக் கட்டத்தில் உள்ளன. கட்டுமானப் பணிகள் முடிந்ததும், அனைத்து கனரக இயந்திரங்களும் அங்கிருந்து அகற்றப்படும். கோயிலின் முக்கியப் பணிகள் அக்டோபர் மாதத்திற்குள் நிறைவடையும். சுற்றுச்சுவர், கலைக்கூடம், கழிப்பறைகள் மற்றும் அறக்கட்டளை அலுவலகம் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகள் நிறைவடைய இன்னும் ஒரு வருடம் ஆகும்” என்று கூறினார்.
2019-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியில் ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் தொடங்கின. கடந்த ஆண்டு ஜனவரி 22-ம் தேதி கோயில் பொதுமக்கள் வழிபாட்டிற்காக திறக்கப்பட்டது.