வங்கதேசத்தில் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் நிலையில், சமீப காலமாக சிறுபான்மையினரான ஹிந்துக்களுக்கு எதிராக தாக்குதல்கள் அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டில் மாணவர் போராட்டங்களைத் தொடர்ந்து முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால நிர்வாகம் அமைக்கப்பட்ட பின்னர், பல பகுதிகளில் ஹிந்துக்களின் சொத்துக்கள் மற்றும் வழிபாட்டு தலங்கள் தாக்கப்பட்டதாக புகார்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில், தலைநகர் டாக்காவின் கில்கெட் பகுதியில் அமைந்திருந்த துர்கா கோவில், ரயில்வேயின் நிலத்தில் கட்டப்பட்டுள்ளதாக கூறி புல்டோசர்களால் இடிக்கப்பட்டது. முன்னறிவிப்பும், வழிபாட்டு பொருட்கள் அகற்றும் வாய்ப்பும் வழங்கப்படாமல், கோவிலுடன் உள்ள கடவுள் சிலைகள் மற்றும் சாமான்கள் உடன் அழிக்கப்பட்டது. இது, அந்த பகுதியிலுள்ள ஹிந்து சமுதாயத்தில் பெரும் அதிர்ச்சியையும், கோபத்தையும் உருவாக்கியது.
இதனைத் தொடர்ந்து, பல்வேறு ஹிந்து அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தின. இந்த நடவடிக்கைக்கு எதிராக இந்திய வெளியுறவுத்துறை கண்டனம் தெரிவித்துள்ளது. நம் வெளியுறவுத்துறை பேச்சாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், “வங்கதேச இடைக்கால அரசு, ஹிந்துக்களின் சொத்துக்கள் மற்றும் மத வழிபாட்டு தலங்களை பாதுகாக்க வேண்டிய கடமை கொண்டுள்ளது” என உறுதியாகக் கூறினார்.
வங்கதேச அரசு விடுத்துள்ள அறிக்கையில், “சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், பொது இடங்களை ஆக்கிரமிப்பது சட்டபூர்வமாக ஏற்க முடியாதது” எனவும் விளக்கமளிக்கப்பட்டது. இருப்பினும், மத வழிபாட்டை மறைமுகமாக ஒடுக்கும் நடவடிக்கைகள், இரு நாடுகளின் உறவிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.