“ரெட்ட தல” படப்பிடிப்பிற்காக வேளாங்கண்ணி சென்றுள்ள நடிகர் அருண் விஜய், அங்குள்ள கோவிலில் வழிபாடு செய்தார். பாபி பாலச்சந்திரன் தயாரிக்கும் ‘ரெட்டதல’ படத்தில் அருண் விஜய் நடித்து வருகிறார். படத்தை கிரீஷ் திருக்குமரன் இயக்குகிறார். சாம் சிஎஸ் இசையமைத்துள்ள இப்படத்தில் நடிகர் அருண் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார், அவருக்கு ஜோடியாக தன்யா ரவிச்சந்திரன் மற்றும் சித்தி இட்னானி நடித்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே ஆலையத்தி வனப்பகுதியில் ‘ரெட்ட தல’ படத்தின் இறுதிக்கட்ட சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், படப்பிடிப்பு இடைவேளையின் போது வேளாங்கண்ணி கோவிலுக்கு வந்த அருண் விஜய், ஆரோக்கிய மாதா கோவிலில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்தார். அப்போது அவருக்கு கோயில் புரவலர் அவுமஷ்ராஜ் ஆசி வழங்கினார். அதன்பின் வேளாங்கண்ணி கோவிலில் அருண் விஜய் மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்தார். வேளாங்கண்ணிக்கு அருண் விஜய் வந்ததும் ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டு செல்பி எடுத்தனர்.
அதையடுத்து, தான் நடிக்கும் ‘ரெட்ட தல’ படம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அருண் விஜய், ரசிகர்களுக்கு ஜனரஞ்சகமான படங்களை விரும்புவதால், இதுபோன்ற கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து ஆக்ஷன் படங்களில் நடிப்பதையே விரும்புவதாக கூறினார். ரெட்ட தல இதுவரை நடிக்காத கதாபாத்திரம் என்றும், வித்தியாசமான கதைக்களத்தில் இப்படம் தயாராகி வருவதாகவும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், அப்பா முத்திரை பதித்த நாட்டாமை படம் போல் நேரம் வரும்போது கண்டிப்பாக ஒரு படத்தை தேர்வு செய்து நடிப்பேன் என்றார். வணங்கான் படம் பற்றி கூறும்போது, வணங்கான் படத்தின் அனைத்து பணிகளும் விரைவில் முடிவடைய உள்ளது. இயக்குனர் பாலா படத்திற்காக கூடுதலாக உழைத்துள்ளார். அவரது இயக்கத்தில் நடித்தது இனிமையான மற்றும் அற்புதமான அனுபவம் என்றார்.