கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் லவ் டுடே படத்தை இயக்கியது மட்டுமின்றி படத்தின் மூலம் ஹீரோவாகவும் மாறினார். லவ் டுடே மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமின்றி பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடி வசூலித்து மாஸ் காட்டியது. லவ் டுடே படத்தின் வெற்றிக்குப் பிறகு பிரதீப் ரங்கநாதனுக்கு ஹீரோவாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அதை ஏற்று தற்போது அவர் நடித்து வரும் படம் லவ் இன்சூரன்ஸ் நிறுவனம். படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார். இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் மற்றும் ரெட்டி பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா, மிஷ்கின், சீமான் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
லவ் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் கதையை முதலில் சிவகார்த்திகேயனிடம்தான் விக்கி சொல்லியிருந்தார். ஆனால் சில காரணங்களால் படம் அறிவிப்போடு நின்று போனது. அதைத் தொடர்ந்து தற்போது பிரதீப் ரங்கநாதனை வைத்து படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ள விக்கி, அதை லவ் இன்சூரன்ஸ் நிறுவனம் அல்லது சுருக்கமாக எல்ஐசி என்று வைத்து பலத்த எதிர்ப்பை சந்தித்தார். தலைப்பை மாற்றும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
தலைப்பை மாற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதில் லேசாக பட்டி டிங்கரிங் பார்த்து LICக்கு பதிலாக LIKஎன மாற்றி இருக்கிறார். அதாவது Love Insurance Company க்கு பதிலாக Love Insurance Kompany என மாற்றி இருக்கிறார். படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் அக்டோபரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பிரதீப் ரங்கநாதனின் பிறந்தநாளான இன்று வெளியாகிறது.