வடகிழக்கு இந்திய மாநிலமான மிசோரத்தில், தடை செய்யப்பட்ட மெத்அம் பெட்டமைன் போதை மாத்திரைகள் மிகப்பெரிய அளவில் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பாய் மாவட்டத்தில் நடைபெற்ற இந்தச் சோதனையில், மியான்மரிலிருந்து வந்த ஒருவரிடம் இருந்து 2.22 கிலோ மெத்அம் பெட்டமைன் மாத்திரைகள் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார் ரூ.6.67 கோடியாகும்.

பாதுகாப்பு படைகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், அசாம் ரைபிள்ஸ் படையினர் மற்றும் மிசோரம் மாநில போலீசார் இணைந்து சொகாவ்தார் கிராமத்தில் சிறப்பு சோதனைச்சாவடி அமைத்தனர். மியான்மர் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்த நபரை அவர்கள் தடுத்து விசாரித்த போது, தடை செய்யப்பட்ட மெத்அம் பெட்டமைன் மாத்திரைகள் அவனிடம் இருப்பது தெரியவந்தது. இது நரம்பு மண்டலத்தை மோசமாக பாதிக்கும் வகைமையுடையது என்பதால், சட்டப்படி முற்றாக தடை செய்யப்பட்ட வகை ஆகும்.
இந்த வகை போதை மாத்திரைகள் ஆசியா மற்றும் மேற்கத்திய நாடுகளில் பெரும் அளவில் புழக்கத்தில் உள்ளன. ஆனால் இந்திய சட்டப்படி, இவை கடுமையாக தடை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு எளிதாக நாட்டுக்குள் கடத்தப்படும் போதைப் பொருட்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்களின் ஆரோக்கியம் மற்றும் சமூக அமைதிக்கு பேரழிவை ஏற்படுத்தும் அபாயம் கொண்டது.
போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபர் தற்போது காவலில் வைத்து விசாரணை செய்யப்படுகிறார். மேலும், இந்த சம்பவத்தின் பின்னணி, மற்றவர்களின் தொடர்பு, மற்றும் இதற்குப் பின்னுள்ள கட்டமைப்பு குறித்தும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மிசோரம் போன்ற எல்லை மாநிலங்களில் உள்ள பாதுகாப்பு மற்றும் காவல் படைகள், இனி மேலும் கண்காணிப்பை பலப்படுத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.