சென்னை ராஜா அண்ணாமலை மண்டபத்தில் நடைபெற்ற இந்து சமய அறநிலையத்துறையின் திருமண விழாவில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு 32 ஜோடிகளுக்கு இலவசமாக திருமணம் செய்து வைத்தார். அவர்களுக்கு நான்கு கிராம் தங்கத் தாலி மற்றும் ரூ.70,000 மதிப்புள்ள சீர்வரிசைகள் வழங்கப்பட்டன. இந்த விழாவில் அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முதலமைச்சர் தனது உரையில், திமுக ஆட்சி வரும் பின்னர் இந்து அறநிலையத்துறை பல்வேறு சாதனைகள் செய்துள்ளதாக கூறினார். கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 3,176 கோவில்களுக்கு குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளதாக அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார். மேலும் 997 கோவில்களின் நிலம் மீட்கப்பட்டதையும் குறிப்பிட்டார்.

திராவிட மாடலின் கீழ் 6000 கோடி ரூபாய் மதிப்பில் 26,000 கோவில்களுக்கு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பழமை வாய்ந்த ஆயிரம் கோவில்களுக்கு மட்டும் ரூ.425 கோடி ஒதுக்கப்பட்டு புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
அமைச்சர் சேகர்பாபு ஆன்மிகத் துறையில் உழைக்கும் புயலாக செயல்படுவதாகவும், உண்மையான பக்தர்கள் இந்து அறநிலையத்துறை வளர்ச்சியை பாராட்டுவதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.
அதேவேளை, பக்தியின் பெயரில் வேஷம் போடும் சிலர் இந்த வளர்ச்சியை தாங்க முடியாமல் விமர்சனம் செய்கின்றனர் என்றும், அதனை வன்மத்தின் வெளிப்பாடாகவே பார்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தன்னைப் பற்றியும் திமுக ஆட்சியைப் பற்றியும் விமர்சனங்கள் தொடர்ந்து வரும் நிலையில், அவை தன்னை ஊக்குவிக்கின்றன என்றும், அது தான் பணியாற்றும் புத்துணர்வை தருகிறது என்றும் ஸ்டாலின் சுட்டிக்காட்டினார்.
அதிகாரத்தின் மீது சாடும் கார்ட்டூன்கள் பரிதாபமானவை என்றும், அவை மீது கவலையில்லை என்றும், உண்மையான ஆன்மிக மக்கள் புரிந்துகொள்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.