இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே நீடித்து வரும் போரை முடிவுக்குக் கொண்டு வர 60 நாள் தற்காலிக போர்நிறுத்தம் அமலுக்கு வருவதாக இருந்தாலும், அந்த முயற்சி தோல்வியடைந்தால் இஸ்ரேல் மீண்டும் காசா மீது ராணுவ நடவடிக்கையைத் தொடங்கும் என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் இருந்து வெளியிட்ட வீடியோவில், ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள பிணைக்கைதிகளை மீட்கும் முயற்சியும், அதன் ராணுவ அமைப்பை முழுமையாக அழிக்கும் நடவடிக்கையும் தொடர்ந்து நடைபெறும் என்று கூறியுள்ளார்.

இந்த பேச்சுவார்த்தையின் மூலம், உயிருடன் உள்ளவர்கள் விடுவிக்கப்படுவார்கள் மற்றும் இறந்தவர்களின் உடல்கள் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், ஹமாஸ் ஆயுதங்களை கீழே போடவேண்டும் என்றும், காசா முழுவதும் ராணுவமயமாதலையும் ஏற்கவேண்டும் என்பது இஸ்ரேலின் நிபந்தனைகளாகும். இவை ஏற்கப்படாவிட்டால், பேச்சுவார்த்தைகள் தோல்வியடையும் என்றும் நெதன்யாகு வலியுறுத்தினார்.
போர்நிறுத்தம் தோல்வியடைந்தால், இஸ்ரேல் தனது ராணுவத்தின் முழுப் பலத்துடன் களமிறங்கத் தயார் எனவும், அரசியல் முயற்சிகள் முடிவளிக்காவிட்டால், ராணுவத்தின் மூலம் முடிவுகளை கொண்டு வருவோம் என்றும் அவர் கூறியுள்ளார். ஹமாஸின் பெரும்பாலான ராணுவ திறன்கள் அழிக்கப்பட்டுள்ளன என்றும், போராளிகளின் துணிச்சலுக்கு நன்றி தெரிவித்தார்.
இந்தச் சூழலில், காசாவில் மருத்துவமனை அருகே காத்திருந்த குழந்தைகள் உள்ளிட்ட 15 பேரை வான்வழி தாக்குதலில் இஸ்ரேல் கொன்றதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனிடையே, ஐரோப்பிய அதிகாரிகள் காசாவிற்கு அவசர உதவித் தொகுப்புகளை அனுமதிக்க இஸ்ரேலுடன் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.