தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்திய குரூப் 4 தேர்வு இன்று மாநிலம் முழுவதும் அமைதியாக நடைபெற்றது. கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 3,935 காலிப்பணியிடங்களுக்கு இத்தேர்வு நடைபெற்று வந்தது. 13.83 லட்சம் ஹால் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்ட நிலையில், தேர்வு காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெற்றது.

இந்த தேர்வில் ஒரு குறிப்பிட்ட வினா பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியது. “ஓலக்கம்” என்னும் சொல்லின் வேர்ச்சொல்லை கண்டறியுமாறு கேள்வி எழுக்கப்பட்டது. தேர்வில் வழங்கப்பட்ட பதில் விருப்பங்களில் “ஓல்” (A) எனும் பதில் தான் சரியானதாகும். இந்தச் சொல் பழங்கால தமிழ் இலக்கியங்களில் அரசவையையும், மன்னரின் மண்டபத்தையும் குறிக்கும் வகையில் பயன்படுத்தப்பட்டது.
பதிற்றுப்பத்தில், “ஓலக்க வினோதத்தொடு படுத்து, மன்னவனது செல்வச் சிறப்பு கூறுதல்” என்ற வரியில் “ஓலக்கம்” பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மன்னன் ராஜசபையில் அமர்ந்து பெருமை கூறுவதை குறிப்பதாக விளக்கம் தரப்படுகிறது. கம்பராமாயணத்திலும் “இரவின் ஓலக்கம்” எனும் உவமை மூலம் அந்தச் சொல் பயன்படுத்தப்பட்டுள்ள தகவலும் காணப்படுகிறது.
“ஓலக்கம்” என்ற சொல் தமிழிலக்கியங்களில் சிறப்பான வரலாற்றுப் பின்புலம் கொண்டதாகும். அரசவையை அல்லது அரசரின் மண்டபத்தை குறிக்கும் இந்தச் சொல், ஒவ்வொரு தமிழ் தேர்வாளருக்கும் தெரிந்திருக்க வேண்டிய மரபுத்தொட்ட சொல்லாகும். இந்த வினா தேர்வை எழுதும் பலரை குழப்பம் அடையச் செய்தாலும், அதனுடன் கூடிய தமிழ் மரபை விளக்கும் ஒரு அரிய வாய்ப்பையும் அது உருவாக்கியுள்ளது.