சென்னை: சிவகங்கை மாவட்டத்தில் துப்பாக்கிச்சூட்டால் உயிரிழந்த அஜித் குமார் சம்பவத்தைத் தொடர்ந்து, காவல்துறை முறைகேடுகளை எதிர்த்து, மக்கள் நலனுக்காக நீதி கோரித் தவெக (தமிழகவெற்றிக் கழகம்) சார்பில் இன்று சென்னை சிவானந்த சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நடிகரும், தவெக தலைவருமான விஜய் பங்கேற்று, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீது கடுமையான விமர்சனங்களை எழுப்பினார்.

கட்சி நிறுவப்பட்டதிலிருந்து விஜய்யின் முதல் நேரடி அரசியல் நடவடிக்கையாக இந்தப் போராட்டம் அமைந்தது. ‘கருணை வேண்டாம், எங்களுக்கு நீதி வேண்டும்’ என்ற வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்திய ஆதரவாளர்கள், காவல்துறை விசாரணையின் போது இறந்தவர்களுக்கு நீதி கோரி கோஷங்களை எழுப்பினர்.விஜய், கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டது அரசியல் வட்டாரத்தில் பேசப்படத்தக்க அளவுக்கு கவனம் பெற்றது.
ஆனால் ஆர்ப்பாட்டம் முடிந்த பின்னர், சில தவெக தொண்டர்கள் சாலையின் நடுவே உள்ள சென்னை மாநகராட்சியின் தடுப்பு கம்பிகளையும், செடிகளையும் சேதப்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது. சுமார் 100 மீட்டருக்கு மேல் அமைந்த ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் தடுப்புகள் மற்றும் நடுவே வைத்திருந்த செடிகள் உடைப்பு, கம்பிகள் சாய்ந்த நிலை ஆகியவை மாநகராட்சி அதிகாரிகளை பதறவைத்துள்ளன. மேலும், போலீசார் பயன்படுத்திய பேரிகேடுகளும் சேதமடைந்துள்ளன.
இந்த சம்பவம் தொடர்பாக, சென்னை மாநகராட்சி மற்றும் காவல்துறையினர் இணைந்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். தவெக தொண்டர்களின் நடவடிக்கையில் சட்ட மீறல் அல்லது பொதுச் சொத்துக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக நிரூபிக்கப்பட்டால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது போன்ற சம்பவங்கள் பொதுக்கட்டமைப்பை பாதிப்பதுடன், எதிர்காலத்தில் அரசியல் இயக்கங்களின் சுதந்திரமான நடவடிக்கைகளிலும் தடையாக மாறக்கூடும்.