அமராவதி: ஆந்திரா சட்டப்பேரவையில் 2014 முதல் 2024 மே வரையிலான சட்டம் ஒழுங்கு நிலை குறித்த வெள்ளை அறிக்கையை முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று தாக்கல் செய்தார்.
அப்போது சந்திரபாபு நாயுடு கூறியதாவது: கடந்த 5 ஆண்டுகால ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் மக்கள் நரக வேதனை அனுபவித்தனர். ஆனால் தற்போது சட்டம் ஒழுங்கில் ஆந்திரா நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது. கடந்த ஆட்சியில் பொய் வழக்கு போட்டவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள். அதே சமயம் இந்த ஆட்சியில் யாரும் சட்டத்தை மீற வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
பெண்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும். சமூக வலைதளங்களில் பெண்களை விமர்சித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஜெகன் ஆட்சியில் காவல் துறை துணையுடன் அராஜகம் நடந்தது. ஜனநாயகம் உடைந்துவிட்டது. காவல்துறை அதிகாரிகள் பழிவாங்கும் நடவடிக்கையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸில் இணைந்தனர். ஜெகன் ஆட்சியில் மட்டும் என் மீது 17 வழக்குகளும், துணை முதல்வர் பவன் கல்யாண் மீது 7 வழக்குகளும் போடப்பட்டுள்ளன.
அனந்தபூர் தெலுங்கு தேசம் நிர்வாகி ஜே.சி.திவாகர்ரெட்டி மீது 60 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தற்போதைய சபாநாயகர் அய்யண்ணா பத்ருடு மற்றும் உள்துறை அமைச்சர் அனிதா மீது எஸ்சி மற்றும் எஸ்டி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எம்எல்ஏ ரகுராமராஜு மீது பொய் வழக்குகள் போட்டு கைது செய்யப்பட்டு சிறையில் சித்திரவதை செய்யப்பட்டார். அதை வீடியோவாக பதிவு செய்து ஜெகனுக்கு நேரடியாக அனுப்பி வைத்தனர். இவ்வாறு சந்திரபாபு பேசினார்.
மாணவர்களுக்கு அனுமதி: நேற்று நடந்த சட்டசபை கூட்டத்தை பார்க்க, கல்லுாரி மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி, பார்வையாளர் பகுதிக்குள் மாணவர் பேரவை அனுமதிக்கப்பட்டது. அப்போது சட்டசபை எப்படி நடக்கிறது என்று பார்த்தனர்.