டேராடூனில் 125 கிலோ வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்ட சம்பவம் வட மாநிலங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது கன்வர் யாத்திரை நடைபெறும் நேரத்தில் நடந்ததால் பாதுகாப்பு பணிகள் மிக அதிகமாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆண்டுதோறும் வட இந்தியாவில் சிவபக்தர்கள் பங்கேற்கும் கன்வர் யாத்திரை கடந்த 11ம் தேதி தொடங்கியது. பக்தர்கள் நடைபயணமாக புனித தலங்களுக்கு சென்று கங்கை நீரை எடுத்துச் செல்வது வழக்கம்.

இந்நிலையில், டியுனி பகுதியில் வாகன சோதனையின் போது போலீசார் ஒரு காரில் இருந்து 125 கிலோ டைனமைட் வெடிபொருட்களை கண்டுபிடித்தனர். காரில் இருந்த மூவர் தங்களது அடையாளங்களை மறைப்பதோடு முரணான பதில்களை அளித்தனர். தொடர்ந்து விசாரணையில், ரிங்கு, ரோகித், சுனில் என்ற பெயர்களுடைய இவர்கள் ஹிமாச்சல் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
அவர்கள், இந்த வெடிபொருட்கள் சாலை பணிக்காக கொண்டு செல்லப்பட்டதாகக் கூறினாலும், போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தேர்தல் நேரம் மற்றும் கன்வர் யாத்திரை நடைபெறும் இந்த சூழலில் வெடிபொருட்கள் கடத்தப்படுவது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
உத்தராகண்டில் உள்ள பஞ்சாயத்து தேர்தல்கள் ஜூலை 24 மற்றும் 28ல் நடைபெறவுள்ளன. தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், இதுபோன்ற சம்பவங்கள் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துகின்றன. ஹரித்துவார் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் வருகை தரும் சூழல் உள்ளது.
அதனால் 125 கிலோ வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டது சாதாரணம் அல்ல என ஹரித்துவார் எஸ்.எஸ்.பி., பிரமோத் சிங் தெரிவித்தார். போலீசார் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த வழக்கு மாநில மற்றும் மத்திய புலனாய்வுப் பிரிவுகளுக்கு அனுப்பப்பட்டு மேலாண்மை நடவடிக்கைகள் தொடர்கின்றன.