வங்கதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள இந்து சமூகத்தை நோக்கிய வன்முறைகள் தொடர்கின்றன. சமீபத்தில் டாக்கா நகரத்தில் நடந்த கொடூரமான சம்பவம், மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பழைய இரும்பு வியாபாரியான லால் சந்த் சோஹாக், சில ஆட்களால் தாக்கி படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரின் உடல்மீது அந்தக் குழுவினர் நடமாடும் வீடியோ இணையத்தில் வெளியாகி, பரவலான கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.

டாக்கா நகரின் மிட்ஃபோர்ட் மருத்துவமனை அருகே கடை நடத்தி வந்த லால் சந்த், பணம் கொடுக்க மறுத்ததற்காக கும்பலால் தாக்கப்பட்டார். கான்கிரீட் சிலாப்பால் தலையில் பலமாக அடிக்கப்பட்ட அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதன்பின் அந்தக் கும்பல் அவரது உடல்மீது நடமாடி அவமதித்து விட்டு பணத்தை பறித்து தப்பியோடினர். இந்த சம்பவத்துக்குப் பின்னணி சிறுபான்மையினரிடம் தொடரும் அடக்குமுறைகளாகும்.
இந்தக் கொலை சம்பவத்திற்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். டாக்கா பல்கலைக்கழகம், ஜெகன்நாத் பல்கலைக்கழகம், BRAC, NSU மற்றும் ஈடன் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ரோட்டில் இறங்கி ஆத்திர கோஷங்களை எழுப்பினர். இடைக்கால அரசை வன்மையாக விமர்சித்த அவர்கள், “மக்களை கொல்ல யாருக்கு உரிமை?”, “வன்முறை நடக்கையில் அரசு என்ன செய்கிறது?” என்று கேள்விகள் எழுப்பினர்.
சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 19 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 14 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் வங்கதேச அரசின் செயல்பாடுகளை மீண்டும் விமர்சனத்திற்கு உட்படுத்தியுள்ளது. இந்தியா – வங்கதேச உறவில் ஏற்கனவே பதட்டம் நிலவுவதைப் பெரிதும் தீவிரப்படுத்தும் வாய்ப்பு இதற்கு உள்ளதாகக் கூறப்படுகிறது.